டிசம்பர் 18, 2019

அன்னமங்கலம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் சட்டம் பயின்ற இளம் பட்டதாரிப் பெண்..!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு இரண்டாவது கட்டமாக டிசம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒன்றியத்தில் உள்ள அன்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட பட்டதாரிப் பெண் சுகன்யா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

24 வயதுடைய சுகன்யா திருமணமாகாதவர். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. மேலும் திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றுள்ளார். இவர் நினைத்தால் தனியார் துறையில் அதிக வருமானம் ஈட்டி சொகுசாக வாழலாம். 

ஆனால் மக்களுக்கு சேவையளிக்க வேண்டும் என்கிற சுகன்யாவின் முயற்சிகளுக்கு விவசாயம் மற்றும் மளிகை கடை தொழில் செய்து வரும் இவரது தந்தை கணேசன் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார்.

இதுகுறித்து சுகன்யா கூறும் போது, "இந்த ஊராட்சிக்கு தேவையான சாலை, மின்சாரம், பொது சுகதாரம் போன்ற அடிப்படை வசதிகளை உடனுக்குடன் அதிகாரிகள் மூலம் நிறைவேற்றிட நடவடிக்கை எடுப்பேன். மேலும் மக்களின் உண்மையான பிரச்சினைகள் என்னவென அறிந்து ஒரு சகோதரியாக உடனிருந்து பூர்த்தி செய்து தருவேன்." என்று உறுதியாகக் கூறினார்.

இந்த சகோதரியை அன்னமங்கலம் ஊராட்சி வாசிகள் வெற்றிபெற செய்வார்களா?

அக்டோபர் 21, 2019

விசுவக்குடியில் பயன்பாடற்ற கிணற்றுக்கு கம்பி வளையம்  அமைத்து மூட கோரிக்கை
விசுவக்குடியில் பயன்பாடின்றி ஆபத்தான நிலையிலுள்ள திறந்தவெளி கிணற்றை கம்பி வளையம் போட்டு முழுவதுமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். வேப்பந்தட்டை அடுத்த அன்னமங்கலம் ஊராட்சி, விசுவக்குடி கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கிராம மக்களின் குடிநீர் தேவைகளுக்காக, வடக்கு தெருவில் கிணறு அமைக்கப்பட்டது. இந்த கிணற்று நீரை, கிராம மக்கள் குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அங்கு மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டதால், இந்த கிணற்றின் பயன்பாடு குறைந்தது. தற்போது பயன்பாடின்றி உள்ள இந்த கிணறு திறந்துகிடக்கிறது. இதன் சுற்றுசுவரும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் கிணற்றின் அருகில் நூலகமும் இயங்கி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் இந்த கிணற்றில் விழுந்து காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

இங்கு குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் சுமார் 50 அடி ஆழமுள்ள இந்த கிணற்றின் அருகே விளையாடும் சிறுவர்கள் தவறிவிழும் அபாயம் உள்ளது.

 எனவே மீண்டும் விபரீதம் ஏற்படுவதற்கு முன்னர் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இந்த கிணற்றை கம்பி வளையம் போட்டு முழுவதுமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 06, 2019

விசுவக்குடி ஜமாத் நிர்வாகிகள் தேர்வு
பெரம்பலூர் மாவட்டம், விசுவக்குடி அத்-தக்வா பள்ளிவாசல் ஜமாத் புதிய நிர்வாகிகள் தேர்வு நேற்று (அக்.6) இரவு 9:30 மணியளவில் நடைப்பெற்றது.
ஓய்வு ஆசிரியர் அமானுல்லா அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வை பள்ளியின் இமாம் முஹம்மது சுலைமான் இறைமறை ஓதி தொடங்கி வைத்தார்.

முதலில் செயற்க்குழு உறுப்பினர்கள் 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக ஹாஜி ரஜாக் (முதல்வீதி), செயலாளராக முஸ்தபா, பொருளாளராக ஓய்வு ஆசிரியர் அமானுல்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். துணை தலைவர், துணை செயலாளர் போன்ற பதவிகளை செயற்குழு கூடி இன்னொரு நாளில் முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் விசுவக்குடி ஜமாத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

அக்டோபர் 02, 2019

  ஒரே திட்டத்திற்காக இரண்டு முறை ஒதுக்கப்பட்ட நிதி: கிராமமக்கள் நீர் ஆதாரத்திற்காக காத்திருக்கிறார்கள்
ஒரே  குடிநீர் திட்டத்துகாக இரண்டு முறை நிதி ஒதுக்கப்பட்டதாக விசுவக்குடி கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் பணிகள் முழுமையாக செய்து முடிக்கவில்லை. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் உள்ள இந்த விசுவக்குடி கிராமம் குடிநீர் தட்டுபாட்டை சந்தித்து வருகின்றது. 

ஒரு கிணற்றில் இருந்து, அங்கு வசிப்பவர்களுக்கு நீர் ஆதாரமாக மின் மோட்டார், பைப்லைன், பம்ப்ரூம் மற்றும் அந்த கிணற்றை சுற்றி சுற்றுசுவர் அமைக்க 27 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை  டெண்டர் அறிவித்துள்ளது.

ஆனால் தற்போது  இரண்டாவது முறையாக இதே திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கிராம மக்கள் புகார் கூறினர். 2018-2019 ஆம் ஆண்டில், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை  (DRDA) இதே நோக்கத்திற்காக ரூ .18.71 லட்சம் ஒதுக்கியது, ஆனால் கிணறு மட்டுமே  தோண்டப்பட்டது. பம்ப் மோட்டார்கள் நிறுவப்படவில்லை மேலும் பைப்லைன் அமைக்கவில்லை.  இந்த திட்டம் முடிவடைய வேண்டும் என்று கிராம மக்கள் பலமுறை வலியுறுத்தினர்.  இதன் விளைவாக மாவட்ட ஊரக வளர்ச்சி துறை முழுமையடையாத இத்திட்டத்திற்கு மீண்டும் நிதி ஒதுக்குகிறது.

400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விசுவக்குடியில் வசிக்கின்றன.  பஞ்சாயத்து யூனியன் மூலமாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடுமையான குடிநீர் தட்டுபாடு இங்கு நிலவுகிறது. இதன் காரணமாக,  மாவட்ட ஊரக வளர்ச்சி துறை குடிநீர் கிணறு அமைக்க முடிவு செய்தது. முதல் சந்தர்ப்பத்தில், கிணறு 70 அடிக்கு தோண்டப்பட்டது, ஆனால் குடிநீர்  எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் எந்த வேலையும் செய்யப்படாமல், திட்ட விவரங்களைப் பற்றிய ஒரு பலகை  மட்டுமே அங்கு அமைக்கப்பட்டது. 

மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் புதிய நிதி ஒதுக்கீட்டைப் பற்றி அறிந்ததும், திங்களன்று மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்ய அவர்கள் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  வந்தார்கள். 
கிராமவாசி அ. குதுரதுல்லா கூறுகையில், “பஞ்சாயத்து 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீரை வழங்குகிறது, ஆனால் எங்களுக்கு  தினமும் குடிநீர் தேவை. நாங்கள் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பல புகார்களை பதிவு செய்திருந்தாலும், அது அனைத்தும் வீணானது ”.

"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர். இளங்கோவனைத் தொடர்பு கொண்டபோது, ​​அவர் கூறினார், “எங்களுக்கு காரணங்கள் உள்ளன. நங்கள் எந்த தவறும் செய்யவில்லை.

பட விளக்கம்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விசுவக்குடி கிராமத்தில் கிணறு புதிதாக தோண்டப்பட்டாலும், பல புகார்கள் வந்தாலும் இங்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

Box News: மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள், அவர்களுக்கு ஒரு பலகை மற்றும் ஆழமான கிணறு  மட்டுமே  கிடைத்தது, வேறு ஒன்றும் இல்லை". என்று  கிராமவாசிகள் சொன்னார்கள்: அவர்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை அணுகினர், ஆனால் அதிகாரிகள் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மூன்று மனுக்களுடன் இப்பிரச்சனையை தொடர்ந்தனர், ஆனால் மீண்டும் எந்த பலனும் இல்லை.

இது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த செய்தியின் மொழியாக்கம்

நன்றி: ஜெய்னுதீன் - சவுதி அரேபியா





விசுவக்குடி பள்ளிவாசல் பின்புறம் உள்ள தெருவில் சோலார் மின்விளக்கு அமைக்க வேண்டும். கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக்:2) பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலத்தில் கிராமசபை கூட்டம் நடைப்பெற்றது. 

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டி இன்று காலை விசுவக்குடி பள்ளிவாசலில் உள்ள ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் அன்னமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக், அல் அமீன் இளைஞர் மன்ற தலைவர் முபாரக் அலி, தமுமுக மாவட்ட செயலாளர் குதரத்துல்லா, ஜமாத் தலைவர் காதர் ஒலி, முன்னாள் ஊராட்சி மன்ற 2வது வார்டு உறுப்பினர் முஸ்தபா,  சாலிகரீம் மற்றும் இளைஞர்கள் என சுமார் 20 பேர் கலந்து கொண்டனர்.

இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வேப்பந்தட்டை,  விசுவக்குடி வழிதடத்தில் பெரம்பலூரில் இருந்து பூலாம்படிக்கு புதிய வழிதடத்தில் பேருந்து இயக்குதல்,

வேப்பந்தட்டை, அன்னமங்கலம், கிருஷ்ணாபுரம் புதிய வழிதடத்தில்  பெரம்பலூரில் இருந்து வீரகனூருக்கு பேருந்து இயக்குதல்,

அன்னமங்கலத்தில் ஏடிஎம் வசதியுடன் கூடிய தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியை ஏற்படுத்துதல்,

முகமது பட்டினத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையை மீண்டும் தரமாக சீரமைத்தல்,

விசுவக்குடியில் இருந்து விசுவக்குடி அணை செல்லும் சாலையை தார் சாலையாக தரம் உயர்த்துதல்,

விசுவக்குடி பள்ளிவாசல் பின்புறம் உள்ள தெருவில் சோலார் மின்விளக்கு அமைத்தல்.... போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிராமசபை கூட்டங்களை சுழற்சி முறையில் கிளை கிராமங்களில் நடத்த வேண்டும். முன்னாள் அன்னமங்கலம்  ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை
கிராம சபை கூட்டங்களை சுழற்சி முறையில் கிளை கிராமங்களில் நடத்த வேண்டும். விதிகள் மாற்றப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (2ம் தேதி) கிராமசபை கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த கூட்டங்களை ஊராட்சியின் தலைமை இடத்திலேயே நடத்தாமல் ஊராட்சிக்கு உட்பட்ட கிளை கிராமங்களில்  சுழற்சி அடிப்படையில் மாறிமாறி நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அன்னமங்கலம் ஊராட்சியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் தலைவராக பதவி வகித்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விசுவக்குடி அப்துல் ஹக் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது.
நான் அன்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த போது கிளை கிராமமான அரசலூரில் கிராமசபை கூட்டத்தை நடத்தியுள்ளேன். ஆனால் மற்றோரு கிளை கிராமமான விசுவக்குடி கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தும் நடத்த மறுக்கிறார்கள்.
அந்தந்த கிளை கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தினால் தான் கிளை கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்ட நிதி விபரங்கள் அக்கிராம அனைத்து மக்களுக்கும் தெரியவரும்.
இதுபற்றி எங்கள் ஊரைச் சேர்ந்த ஜகரிய்யா என்பவர் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் தீர்வு கிடைக்காத நிலையில் சமீபத்தில் காந்தி ஜெயந்தி அன்று நடத்தப்படும் கிராமசபை கூட்டத்தையாவது விசுவக்குடியில் நடத்த வேண்டும் என தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவுக்கு, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பாக அளித்துள்ள பதிலில்
முதலில் மனுதாரரின் கோரிக்கை ஏற்க்கபட்டு கிளை கிராமங்களில் சுழற்சி அடிப்படையில் கிராம சபை கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படுமென்றும், பிறகு அடுத்த வந்த பதிலில் அன்னமங்கலம் ஊராட்சி அரசலூர், விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம், ஈச்சங்காடு, பூம்புகார் ஆகிய 6 கிளை கிராமங்கள் இருப்பதால் அத்தனை கிராமத்தினரின் கோரிக்கை தலைமை இடத்தில் இருந்து மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதால் கோரிக்கை மனு நிராகரிக்கப்படுவதாகவும், இருவேறு முரண்பட்ட பதில்கள் தரப்பட்டுள்ளன.
இது அதிகாரிகளின் குழப்ப நிலையை காட்டுகிறது. விரைந்து தெளிவான முடிவெடுத்து கிளை கிராமங்களுக்கு சாதகமான பதில்களை தரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனால் கிராம சபைக் கூட்டங்களை பொதுமக்களின் எதிர்ப்புகளை சமாளிப்பதற்காக, பல ஊராட்சிகளில் கிளை கிராமத்தினர் வந்து சேரும் முன்பாக உள்ளூரை சேர்ந்த குறைந்த நபர்களைக் கொண்டு, திட்ட பணிகள் முறைகேடு குறித்துக் கேள்வி எழுப்பாத மகளிரை வைத்துக் கொண்டு பிரச்சினைகள் வெடிக்கும் முன்பாக நடத்தி முடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








கிராமசபை கூட்டங்களை சுழற்சி முறையில் கிளை கிராமங்களில் நடத்த வேண்டும். முன்னாள் அன்னமங்கலம்  ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக் கோரிக்கை


 நன்றி: தினகரன்

அக்டோபர்:2


அக்டோபர் 01, 2019

ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதால், பணிகள் முடிந்த திட்டங்களுக்கு மீண்டும் டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டு
பணிகள் முடிந்த திட்டங்களுக்கு மீண்டும் டெண்டர் அறிவிப்பு ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதால் டெண்டரை ரத்து செய்யக்கோரி விசுவக்குடி கிராமத்தினர் பெரம்பலூர் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது விசுவக்குடி கிராமம். இவ்வூரைச் சேர்ந்த முன்னாள் அன்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக் தலைமையில் விசுவக்குடி ஜமாத் பொருளாளர் அமானுல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் குதரத்துல்லா உள்ளிட்ட பலர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, கலெக்டரிடம் சாந்தாவிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது,

அன்னமங்கலம் ஊராட்சி, விசுவக்குடி கிராமத்தில் போதிய மழை இல்லாததால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே இங்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக விசுவக்குடி தொடக்கப்பள்ளியின் அருகே உள்ள ஊரணி - குளத்தில் புதிய கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ரூ 18.71 லட்சம் மதிப்பில் 2018 - 2019-ம் ஒன்றிய பொது நிதியில் புதிய கிணறு அமைத்தல், சுற்றுச்சுவர் கட்டுதல், மின்மோட்டார் அமைத்தல், பம்ப்ரூம் கட்டுதல் மற்றும் பைப்லைன் அமைத்தல் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

கிணறு மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் மட்டும் முடிந்துள்ள நிலையில் நேற்று திங்கட்கிழமை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மின்மோட்டார் அமைத்தல், பம்ப்ரூம் அமைத்தல் மற்றும் பைப்லைன் அமைத்தல் போன்ற அதே பணிகளுக்காக ரூபாய் 27 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் மீண்டும் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய மதிப்பில் உள்ள மின்மோட்டார்  மற்றும் பைப்லைன் போன்றவை அமைக்காமல் செலவு செய்யப்பட்டு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த புதிய டெண்டர் மூலம் பொதுமக்கள் பணம் வீணடிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த ஒப்பந்தத்தை அனுமதித்தால் ஊழலுக்கு வழிவகுப்பதாகவே அமையும்.

மேலும் தற்போது ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து தகுந்த நீராதாரம் உள்ள இடத்தை தேர்வு செய்து, புதிய கிணறு வெட்டி, விசுவக்குடி கிராமத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதால், பணிகள் முடிந்த திட்டங்களுக்கு மீண்டும் டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். கலெக்டரிம் விசுவக்குடி மக்கள் மனு
நன்றி: தினகரன்
அக்டோபர்: 01, 2019

செப்டம்பர் 25, 2019

விசுவக்குடியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் தற்போது பருவ மழை பெய்தாலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் மழை பெய்யவில்லை. அதாவது எந்த ஊரிலும் ஏரி குளங்களில் தண்ணீர் நிரம்பவில்லை. இதனால் பெரும்பாலான ஊர்களில் குடிநீர் பஞ்சம் இருந்து வருகிறது. மேலும் கிணற்றுப்பாசனம் மூலம் செய்யக்கூடிய விவசாயமும் பெரும் பாதிப்படைந்துள்ளது.

எனவே நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் மழை பெய்ய வேண்டி விசுவக்குடி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை நடத்த முடிவு செய்தனர்.

 அதன்படி இமாம் முஹம்மது சுலைமான் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றுதிரண்டு அத்-தக்வா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக அருகிலுள்ள களத்துமேடு என்ற பகுதிக்கு சென்றனர். அங்கு அனைவரும் ஒன்றுகூடி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பஞ்சம் நீங்க வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு தொழுகை நடத்தினர்.

நன்றி: தினத்தந்தி
செப்டம்பர்: 25, 2020

https://youtu.be/_QCG00d5UrM


அன்னமங்கலம் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நிற்கும் அவலம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் முகமது பட்டினம் கிராமத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் முதல் ஒரு கிலோமீட்டர் சாலை புதிதாக போடப்பட்டு 2 மாதங்கள் கூட ஆகவில்லை.

மிதமான மழைக்கு கூட தாக்குபிடிக்காத இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக குளம்போல் காட்சியளிக்கிறது.


நன்றி: தினகரன்
செப்டம்பர்: 25, 2020


செப்டம்பர் 22, 2019

40 ஆண்டுகளுக்கு முன் உதித்த கனவை நிறைவேற்ற 45 நாட்களில் உறைபனி மலைகளை கண்டு ரசிக்க பைக்கில் சென்ற விசுவக்குடி கட்டிட தொழிலாளி
பனிப் பிரதேசங்களை பக்கத்தில் நின்று பார்த்து ரசிக்க வேண்டுமென்பது பால்ய வயது கனவு. 14 ஆயிரம் கிமீ பைக்கில் பயணித்து, கனவை நனவாக்க புறப்பட்ட பெரம்பலூர் பைக் ஆர்வலர். உறைபனி மலைகளை காணும் உல்லாச பயணத்திற்கு, உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர் உறவினர்கள். 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சி, விசுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரஹமத்துல்லா (52). 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், தனது 21 வயதிலேயே துபாய்க்கு வேலைக்கு சென்றார். 26 வது வயதில் திருமணம் செய்துகொண்ட ரஹமத்துல்லாவுக்கு ஒரு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். 

இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி பேரக்குழந்தையும் உள்ளனர். 2வது மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். ரஹமத் துல்லா வெளிநாட்டில் கட்டுமானப்பணி செய்தவர்.

தாத்தாவாகிவிட்ட நிலையிலும் ரஹமத்துல்லாவுக்கு அல்டிமேட் ஸ்டார் அஜீத்தை போல, பைக்கில் வெகுதூரம் பயணிப்பது அலாதிப் பிரியமாகும். 

21 வயது முதல் 45வயதுக்குள்ளாக 18 ஆண்டுகள் வெளிநாட்டிலேயே வேலை பார்த்துள்ள ரஹமத்துல்லாவுக்கு, தனது பால்ய வயது கனவு ஒன்று உள்ளது. அதாவது பனிப்பிரதேச மலைகளை பக்கத்திலிருந்து ரசிக்க வேண்டும் என்பதுதான் அது. 

ஆயுள் அரை நூற்றாண்டை கடந்துவிட்ட நிலையில், அந்த ஆசை மீண்டும் அரும்பியதால், பால்ய வயது கனவை பைக்கில் சென்று நிறைவேற்ற புதிய திட்டமும் உதித்தது. இதற்காக திருமணமான பிறகு பலமுறை இமயமலை பனிப்பிரதேசத்திற்கு செல்ல நினைத்தவருக்கு, பார்டர் என்றாலே பதற்றமான பகுதியென்ற அச்சத்தால் பல முறை தவிர்த்து வந்தார்.

 இந்நிலையில் செப்டம்பரில் இமயமலைக்கு செல்லத்திட்டமிட்டுள்ளார். இதற்கு மனைவி, மகள், அம்மா மற்றும் உறவினர்களிடம் சொல்லி விருப்பத்தை தெரிவித்துள்ளார். 

அனைவரும் சம்மதிக்கவே பைக் பயணத்திற்காக ₹1.20லட்சத்தில் 220 சிசி திறன் கொண்ட அவெஞ்சர் குரூஸ் என்ற அதிவேக, தொலை தூரப்பயணத்திற்கான புதிய பைக் ஒன்றை வாங்கி, அதில் பயணத்திற்கு ஏற்றபடி ₹40 ஆயிரத்திற்குள் எக்ஸ்ட்ரா பிட்டிங் வேலைகளை செய்துள்ளார். 

தான் செல்லும் வழித் தடங்களுக்கான மேப் வாங்கி பயண பாதையை நிர்ணயித்து கொண்டார்.

தனது பைக்கில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தி கொண்டார். ஆங்கிலத்தை புரிந்து கொள்ளவும், இந்தியில் சரளமாக பேசவும் தெரிந்துள்ள ரஹமத்துல்லா பயணத்துக்கு தயாரானார். சுற்றுலா பயணமாக செல்லும் இவரை இவரது மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் கடந்த 15ந்தேதி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். 

இந்த பைக் பயணம் குறித்து ரமத்துல்லா தெரிவித்ததாவது:14ஆயிரம் கி.மீ பயணித்து பார்டரில் உள்ள பனிப்பிரதேசங்களை பக்கத்தில் நின்று பார்த்து ரசிப்பதற்காக மட்டுமே செல்லுகின்றேன். 

வேலூர் மாவட்டம் வழியாக ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் சென்று, தெலங்கானா, ஒடிசா, பீகார், மேற்குவங்கம் டார்ஜிலிங், சிக்கிம் என பயணித்து சீன எல்லையில் நின்று ரசிக்க உள்ளேன். 

பின்னர் பூடான் வழியாக யூனியன் பிரதேசங்களான அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், மிஜோரம், மியான்மர் பகுதிகளில் உள்ள பனிப்பிரதேசங்களை பார்த்து ரசித்தபடி பயணித்து 45 நாட்களில் சொந்த ஊர் திரும்பத்திட்டமிட்டுள்ளேன். 

40 ஆண்டுகளுக்கு முன்பு உதித்தக் கனவை 45 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

நன்றி: தினகரன்

40 ஆண்டுகளுக்கு முன் உதித்த கனவை நிறைவேற்ற 45 நாட்களில் உறைபனி மலைகளை கண்டு ரசிக்க பைக்கில் சென்ற விசுவக்குடி கட்டிட தொழிலாளி

https://www.google.com/amp/s/m.dinakaran.com/article/News_Detail/527866/amp

செப்டம்பர் 19, 2019

தெரிந்து கொள்வோம்...
நமதூர் விசுவக்குடியில் இருந்து வடக்கு திசையை நோக்கினால் ஒரு மலை தெரியும் அல்லவா. முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் வழியாக தொண்டமாந்துறை செல்லும் போது இந்த மலையை அருகில் பார்த்திருப்போம்... அருகில் பயணித்திருப்போம்.

இப்போ அதுக்கு என்னா? என்று நினைக்கிறீர்களா,

கிழக்கு, மேற்கு திசையாக நீண்டு இருக்கும் இந்த மலையினுடைய ஒரு குறிப்பிட்ட பகுதி கனிமம் மற்றும் சுரங்கதுறையின் கட்டுபாட்டிலும் மேலும் ஒருபகுதி தனிநபர் ஒருவருக்கு சொந்தமாகவும் உள்ளது. 

உண்மையாகவா? ஆம். அந்த மலையின் மேல் உள்ள முருகன் கோவிலும் அவருக்கே சொந்தமானது. 

எதிர்காலத்தில் பயன்படும் என்று நினைத்தால்  இந்த மலையில் நீங்கள் நிலம் வாங்கலாம். இந்த மலையை பற்றி இதுமட்டுமா?

இந்த மலையில் உள்ள குவாரிகள், கிரஷர்கள் ஆண்டுக்கு சுமார் 50 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டிதருகிறதாம். இந்த மலையில் பரியாறி என்ற பெயரில் ஒரு குட்டை உள்ளதாம். இந்த குட்டையில் உள்ள நீர் வறட்சி காலங்களில் கூட வற்றாதாம்.

அருகில் உள்ள பச்சைமலை வனத்துறையின் கட்டுபாட்டில் சேர்த்த போது இந்த மலையை ஏன் சேர்க்காமல்விட்டார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை கால்நடைகளை மேய்க்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்களோ?

இதுபோல் நிறைய எழுத வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் இதுபோன்ற தகவல்களை குழுவில் உள்ளவர்கள் படிப்பார்களா? என்றுதான் தெரியவில்லை.

செப்டம்பர் 14, 2019

இந்தியா முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றிவர வெல்டிங் பட்டறை தொழிலாளி முயற்சி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்துள்ள விசுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லாஹ் (வயது 52). இவர் வெல்டிங் பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார்.

 இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு சிறு வயதிலிருந்தே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். இதனால் இந்தியா முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து பார்க்க வேண்டும் என்பது இவரது தீராத ஆசை.

 இந்நிலையில் இவர் இந்தியாவை மூன்று கட்டங்களாக சுற்றி வர திட்டமிட்டார். முதல் கட்டமாக வடகிழக்கு மாநிலங்களான ஆந்திரா, அசாம், திரிபுரா, மேகாலயா, நாகலாந்து, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கு சென்றுவர 50 நாள் பயணத் திட்டத்தை வகுத்தார்.

 பயணத்திற்குத் தேவையான கேமரா பொருத்தப்பட்ட ஹெல்மெட், கையுறை, உடல் பாதுகாப்பு கவச உடை வாங்கினார். மேலும் மோட்டார் சைக்கிளில் தான் எங்கே பயணிக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஜிபிஎஸ் கருவியையும் வாங்கி பொருத்தினார்.

 இதனைத்தொடர்ந்து நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பயணத்தை தொடங்கினார். அதற்கு முன்னதாக இந்த 50 நாள் பயணத்திற்கு தேவையான சமையல் பாத்திரம் மற்றும் கட்டில் போன்ற உபகரணங்களை தனது மோட்டார் சைக்கிளில் கட்டி வைத்துக் கொண்டார்.

 இந்தியா முழுவதும் சுற்றிவரும் அவரது பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் வழியனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினத்தந்தி
செப்டம்பர்: 14, 2020



செப்டம்பர் 05, 2019

புதிய கிராம நிர்வாக அலுவலர்
நாம் வேப்பந்தட்டை வடக்கு வருவாய் கிராமத்தில் வாழ்ந்து வருகிறோம். பிரியா என்ற நமது கிராம நிர்வாக அலுவலர் (VAO) இடம் மாறுதல் காரணமாக சென்றுவிட்டார்.

தற்போது நூத்தப்பூரை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் வேப்பந்தட்டை வடக்கு புதிய கிராம நிர்வாக அலுவலராக (VAO) நியமிக்கப்பட்டுள்ளார்.

இனி அன்னமங்கலம் கிராமத்தின் ஒருபகுதி, விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் மக்கள், கிராம சட்டம் ஒழுங்கு, பட்டா, சிட்டா... மற்றும் அரசின் இன்னபிற சான்றிதழ்கள் தொடர்பாக இந்த புதிய கிராம நிர்வாக அலுவலரை தொடர்புக் கொள்ளவும்.

ஆரோக்கிய சாமி
கிராம நிர்வாக அலுவலர்
+91 97512 59951

ஆகஸ்ட் 26, 2019

முஸ்லிம் திருநங்கை
திருச்சி பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் நண்பருக்காக காத்திருந்தேன். அப்போது ஒரு திருநங்கை கைதட்டி யாசகம் கேட்டுகொண்டு இருந்தார்.

பின்னர் என் அருகில் வந்தார். பேசும் வாய்ப்பு கிடைத்தது. பேசினேன். முதலில் உருது மொழியில் பேசியவரிடம்,

"உங்கள் பெயர் என்ன? " என்று தமிழில் கேட்டேன்.

"ஷானு நபீஸ்" என்றார்.

"நீங்கள் முஸ்லிமா?" என்று கேட்டேன்.

" ஆம்" என்றார்.

பார்ப்பதற்கு சிறிய வயதுடையவர் போன்றும், அழகாகவும் இருந்தார்.

தொடர்ந்து " நீங்கள் என்ன படித்து இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

" பிஎஸ்சி பயோ டெக்னாலிஜி" என்றார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என் வாழ்நாளில் பார்த்த முதல் முஸ்லிம் திருநங்கையும், படித்தவரும் இவராக தான் இருக்கும்.

அவர் வேலையில் பிஸியாக இருந்தவர் என்னிடம் பணம் ஏதும் கேட்காமல் அங்கிருந்து நகர முற்பட்டார். 

" அக்கா" என்றேன்.

நெகிழ்ச்சியுடன் திருப்பியவரிடம் " உங்களை ஒரு ஃபோட்டோ எடுத்து கொள்ளட்டுமா?" என்று அனுமதி கேட்டேன்.
தயக்கத்துடன் நின்று போஸ் கொடுத்தார்.

நானும் அவரை எனது செல்லில் ஃபோட்டோ எடுத்தேன். அது சரியாக வரததால் இரண்டாவது முறை எடுக்க முயற்சி செய்யும் போது, என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. எனது அருகில் வந்து  செல்லை வாங்கி அவரே ஃசெல்பி எடுத்து கொடுத்துவிட்டு மீண்டும் கைதட்டி யாசகம் கேட்க சென்றுவிட்டார்.

இன்று சமூகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை. திருநங்கையாக இருந்தாலும் அவர் முஸ்லிம் தான். அவரின் இந்த நிலைக்கு காரணம்
இறைவனா?
பெற்றோரா?
சமூகமா? 
அரசா? என்ற கேள்விகளுடன் அவர் கண்களிலிருந்து மறையும் வரை பார்த்து கொண்டே இருந்தேன். 

- தௌ.மு.ஜகரிய்யா

ஆகஸ்ட் 15, 2019

விசுவக்குடியில் கபடி போட்டி
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவக்குடி கிராமத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கபடி போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் பெரம்பலூர், சேலம், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கபடி அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். போட்டி பல்வேறு சுற்றுகளாக நடைபெற்றது. 

இறுதியில் முதலிடம் பிடித்த சமயபுரம் ஈச்சம் பட்டி அணிக்கு ரொக்க பரிசு ரூபாய் 3 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த விசுவக்குடி அணிக்கு ரூபாய் 2 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்த புது ஆத்தூர் அணிக்கு ரூபாய் ஆயிரமும் வழங்கப்பட்டது. 
 
இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அணி வீரர்களுக்கும் நற்பணி மன்றத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நன்றி: தினத்தந்தி
ஆகஸ்டு:15


கால்நடைகள் குடிப்பதற்கு கூட தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் விசுவக்குடி அணைக்கட்டு. பாசன வாய்க்காலை கட்டி முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
கால்நடைகள் குடிக்கக்கூட தண்ணீரின்றி விசுவக்குடி அணைக்கட்டு வறண்டு கிடக்கிறது. எனவே திட்டமிட்டபடி பாசன வாய்க்காலை கட்டி முடிக்க வேண்டுமென சுற்றுவட்டார விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2015ம் ஆண்டு வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவக்குடி அருகே பச்சைமலை, செம்மலை ஆகிய இருமலை குன்றுகளை இணைத்து விசுவக்குடி அணைக்கட்டு ரூ.33.67 கோடி மதிப்பில் புதிய அணைக்கட்டு பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் சார்பில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் கட்டி முடிக்கப்பட்டது. 

கட்டி முடிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த அணைக்கட்டில் 4 ஆண்டுகள் கடந்த பிறகும் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடக்கூடிய வரத்து வாய்க்கால்கள் இதுவரை கட்டி முடிக்கவில்லை. 4 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு அணையின் இருபுறம் இருந்து பாசனத்துக்காக வரத்து வாய்க்கால்கள் கட்டப்படும் என தெரிவித்த நிலையில் 4 ஆண்டுகளில் இதுவரை பாசன வாய்க்கால் பணிகள் 50 சதவீதம் கூட நிறைவடையவில்லை.

குறிப்பாக 2015ம் ஆண்டிலும், 2017ம் ஆண்டிலும் அணையின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவை எட்டியபோதும் அணைக்கட்டை சார்ந்துள்ள தொண்டமாந்துறை, விசுவக்குடி, அன்னமங்கலம், அரசலூர், ஈச்சங்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் நலனுக்காக இதுவரை ஒருசொட்டு தண்ணீர் கூட திறந்து விடவில்லை. 

காரணம் பாசன வாய்க்கால் பணிகள் பாதியிலேயே நிற்பது தான். 2017ம் ஆண்டு வெங்கலம் விவசாயிகள் விடுத்த வேண்டுகோளின்படி வெங்கலம் ஏரிக்கு மட்டும் எம்எல்ஏ தமிழ்ச்செல்வனால் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

 அணைக்கட்டு கட்டி முடித்ததன் நோக்கம் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன பரப்பு பயனடையும் என்ற கணக்கில் தான். மேலும் சுற்றுவட்டார கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் ஆதாரம் பெருகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அணைக்கட்டில் நீர் நிரம்பி இருந்தாலும் சுற்றுவட்டார கிணறுகளில் ஒரு அடி உயரம் கூட தண்ணீர் இதுவரை உயர்ந்தபாடில்லை.

கனமழைக்கு உற்பத்தியாகி கரைபுரண்டு ஓடும் காட்டாறு எனப்படும் கல்லாறு தண்ணீர் முழுவதும் ஒரு இரவு, ஒருபகல் முழுவதும் ஆர்ப்பரித்து கடந்து சென்று கடலூர் மாவட்டம் வழியாக கடலுக்கு சென்று வீணாவதை தடுக்க தான் இந்த அணைக்கட்டு கட்டப்பட்டது. ஆனால் இந்த அணைக்கட்டு தற்போது மீன் வளர்ப்பதற்கு கூட ஏதுவான நிலையில் இல்லை.

 அணைக்கட்டில் இதுவரை இருமுறை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டும் 2 மாதங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் பூமியாலும், வானத்தாலும் உறிஞ்சப்பட்டு வறண்டு விட்டது. கடந்த 3 மாதங்களில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து பெரம்பலூர் மாவட்டத்தில் கீழப்பெரம்பலூர், வடக்கலூர் ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி வழிந்தும் 8 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பியும், 15 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேல் நிரம்பியும், விசுவக்குடி அணைக்கட்டு மட்டும் கால்நடைகள் தண்ணீர் குடிக்கக்கூட ஏதுவான நிலையில் இல்லை என்பதால் விவசாயிகள் மத்தியில் விரக்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தும் அணைக்கட்டை ஆழப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ளவோ, பச்சைமலை, செம்மலைகளை இணைக்கும் பகுதியில் உள்ள மலை உச்சியிலிருந்து மொத்த மழைநீரும் அணைக்கு வந்துசேர வேண்டிய வரத்து வாய்க்காலை சீரமைக்கவோ திட் டமிடாமல் பொழுதுபோக்கு வசதிக்காக சுற்றுலாத்தலமாக்கி விடுவோம் என்கிற பெயரில் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி செலவு செய்தும், தண்ணீர் வசதி இல்லாத நிலையில் திண்டாடும் அவல நிலையில் தான் அணைக்கட்டு உள்ளது. 

வருங்காலத்தில் நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பி வழியும் போதாவது, அதில் தேங்கியுள்ள தண்ணீரை பாசனத்துக்காக பயன்படுத்தும் நோக்கத்தில் வரத்து வாய்க்காலை முழுமையாக அமைத்துத்தர பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு அக்கறை காட்ட வேண்டும். அதை விடுத்து விவசாயத்துக்காக ஒதுக்கப்படும் நிதியை விரயமாக்கும் நோக்கில் பொதுப்பணித்துறை தொடர்ந்து செயல்பட்டால் மீன் வளர்க்க மட்டுமன்றி சாதாரண செடிகளுக்கு கூட தண்ணீரில்லாத சூழலில் தான் அணைக்கட்டு இருக்கும்.

 எனவே விசுவக்குடி அணைக்கட்டுக்கான பாசன வாய்க்காலை அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவு செய்து செய்து முடிக்க வேண்டுமென பொதுப்பணித்துறை, மாவ ட்ட நிர்வாகத்தை சுற்றுவட்டார விவசாயிகள் கேட்டு கொண்டுள்ளனர்.





ஏப்ரல் 19, 2019

குவைத்திலிருந்து சொந்த ஊருக்கு வந்து வாக்குப்பதிவு செய்த 2 இளைஞர்களுக்கு பாராட்டு
பெரம்பலூர்  மக்களவை தொகுதியில் உள்ள விசுவக்குடி வாக்கு சாவடியில் வாக்களிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் தாயகம் வந்து வாக்கு செலுத்த காத்திருக்கும் அபுபக்கர் சித்திக் மற்றும் நூருல்லா என்ற இளைஞர்கள்



நன்றி: தினகரன்

ஏப்ரல் 18, 2019

விசுவக்குடி வாக்கு பதிவு நிலவரம்
2019 மக்களவை தேர்தலுக்கான விசுவக்குடி வாக்கு சாவடியில் வாக்குப்பதிவு முடிந்தது. மொத்தம் 73% சதவீத  வாக்குகள் பதிவாகியது. இதில் பதிவான வாக்குகளில் 341 ஆண்கள் 449 பெண்கள் என மொத்தம் 790/1083 வாக்குகள் பதிவாகி உள்ளது.

மார்ச் 04, 2019

விசுவக்குடியில் காங்கிரஸ் கட்சியின்   கொடியேற்றுதல் மற்றும் பிரச்சாரக் கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடி கிராமத்தில் இன்று திங்கள் கிழமை(04.03.18) காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கொடியேற்றுதல் மற்றும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைப்பெற்றது.

விசுவக்குடி பேருந்து நிறுத்தத்தில் இரவு 7 மணி அளவில் நடைப்பெற்ற இந்நிகழ்வை சேட் எனும் முகம்மது மீரான் தலைமை ஏற்று நடத்தினார்.

விசுவக்குடி காங்கிரஸ் கமிட்டி தலைவர் இப்ராஹிம், ஜமாத் தலைவர் காதர் அலி, அபுல் ஹஸன், முகமது பாரூக், தௌலத் அலி, காஜா மொய்தீன் போன்றோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தமிழ்செல்வன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

மாவட்ட பொருளாளர் ஆசை தம்பி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி மூக்கன், தங்கவேல், அருணாசலம், மாவட்ட பொது செயலாளர் சாமிதுரை, துரை ராமசந்திரன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ரஞ்சித் குமார், மாவட்ட துணை தலைவர் அருணாசலம், செல்வம், சுந்தர் ராஜ், சின்னசாமி,  முத்து கிருஸ்ணன், தொகுதி ஊடகப் பிரிவு தலைவர் செந்தில் பிரசாத், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வை முதலில் காவல்துறை ஓய்வு சபியுல்லா வரவேற்றார். இறுதியாக ராஜேந்திரன் நன்றி கூறினார்.




பிப்ரவரி 20, 2019

அரசு பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய விசுவக்குடி கிராம மக்கள்
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள  விசுவக்குடியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.
இன்று பிப்ரவரி 20ம் தேதி புதன் கிழமை பள்ளியில் கல்வி சீர்விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி மாணவர்கள், ஊர் பொது மக்கள் முன்னிலையில் நடைப்பெற்ற இந்நிகழ்வை பள்ளியின் தலைமை ஆசிரியர் மாலா ரோஸ்லின் தலைமை ஏற்று நடத்தினார்.

இதில் இலவசமாக பள்ளியின் வளர்ச்சிகாக மேஜை, நாற்காலி, பீரோ, விளையாட்டு உபகரணங்கள்... போன்றவற்றை ஊர்வலமாக எடுத்துவந்து பொதுமக்கள் வழங்கினர்.

இந்நிகழ்வில் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் பிரான்ஸிஸ் பீட்டர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அ.நெகமத்துல்லா, கிராம கல்வி குழு தலைவர் காமீலா பேகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குதரத்துல்லா, விசுவக்குடி ஜமாத் தலைவர் காதர் அலி,  அம்பேத்கர் இளைஞர் குழு சாமிதுரை, முன்னாள் வார்டு உறுப்பினர் மருதை, அல் அமீன் இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்கள், அனைத்து மகளிர் குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.




ஜனவரி 24, 2019

அன்னமங்கலத்தில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது: திமுக கிராமசபை கூட்டத்தில் முறையீடு
அன்னமங்கலம்,  தொண்டமாந்துறை ஊராட்சிகளில் இன்னமும் குடிநீர் பிரச்சினை  தலை விரித்தாடுகிறது என திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் பெண்கள் முறையிட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில், அன்ன  மங்கலம், தொண்டமாந்துறை ஆகிய கிராமங்களில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடை  பெற்றது. 

வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செலாளர் நல்லதம்பி தலைமை யில் நடை  பெற்ற இந்த கூட்டங்களில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 அப்போது, அன்னமங்கலம் தொண்டமாந்துறை ஊராட்சிகளுக்கு நடுவே கல்லா ற்றின் குறுக்கே கட்டிமுடித்து 2 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் பாசனத்திற்கு ஏற்ப வரத்து  வாய்க்கால்கள் அமைக்கப்படாமல் உள்ளது.

 இதனால் அணைக் கட்டில் தண்ணீர்  நிரம்பினாலும் சுற்றிலுமுள்ள நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விட  வழி யில்லாமல் உள்ளது. 

  4கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்ட வேண்டிய வரத்து  வாய்க்கால்கள் 2கிலோ மீட்டர் நீளத்திற்குக் கூட கட்டப்பட வில்லை. கட்டிய  வரத்து வாய்க்கால்கள் தூர்ந்து போய் புதர்கள் மண்டிக் கிடக்கிறது.

 இதனால்  அணையிலிருந்து வெங்கலம் ஏரிக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விட முடியும்.  அருகிலுள்ள வயல்களுக்கு பயனே இல்லாமல் போய் உள்ளது. 

அன்னமங்கலம்,  தொண்டமாந்துறை ஊராட்சிகளில் இன்னமும் குடிநீர் பிரச்சி னை  தலை விரித்தாடுகிறது. 

போதுமான மருத்துவமனை வசதி இல்லாதது, பஸ் வசதி, தெரு  விளக்குகள் இல்லாதது குறித்து பொதுமக்கள் குமுறினர். 

இந்த கூட்டத்தில்  முன்னாள் திமுக அமைச்சர் கே.பி.பி.சாமி, மாவட்ட செயலாளர்  குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் கேள்விகளுக்கு பதில்  அளித்து பேசினர்.

 கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ துரைசாமி,  மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினகரன்

ஜனவரி 07, 2019

விசுவக்குடியில் அடைப்பின் காரணமாக தேங்கிய கழிவுநீர்: குடியிருப்பு வாசிகள் பாதிப்பு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி கிராமம் உள்ளது.

இங்கு தெற்கு தெருவில் வீட்டு எண் 10/91 கொண்ட ஜமால் முஹம்மது என்பவரது வீடு உள்ளது. இவரது வீட்டின் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பின் காரணமாக கழிவு நீர்  தேங்கி உள்ளது.

இதனால் துறுநாற்றம் வீசுவது மட்டுமில்லாமல் கொசுக்களும் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்பட்டு இதனை சுற்றியுள்ள மக்கள் பாதிக்கப்படும் முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனவரி 05, 2019

அல் அமீன் இளைஞர் சங்க கூட்டம்: துணை நிர்வாகிகள் தேர்வு
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள விசுவக்குடியில் இன்று  (ஜனவரி 5) சனிக்கிழமை அல் அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் கூட்டம் நடைப்பெற்றது. 

அல் ஜன்னத் சமுதாய கூடத்தின் அருகில் இரவு 9 மணிக்கு நடைப்பெற்ற இக்கூட்டத்தை மன்றத்தின் தலைவர் முபாரக் அலி தலைமை ஏற்று நடத்தினார்.

முன்னாள் நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் மன்றத்தில் உள்ள பொறுப்பாளர்களுக்கு உதவியாக துணை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

மேலும் விசுவக்குடியில் இருந்து விசுவக்குடி அணை செல்லும் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும்.

வருகிற ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தில் நடைப்பெறும் கிராம சபை கூட்டத்தை விசுவக்குடியில் நடத்த வேண்டும், போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. 

இதில் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மன்றத்தின் உறுப்பினர் ஹஸன் முஹம்மது  வரவேற்றார். இறுதியாக மன்றத்தின் உறுப்பினர் முஹம்மது ஜகரிய்யா நன்றி கூறினார்.
------------------------------------------------------------------------------
 தலைவர்: முபாரக் அலி
து. தலைவர்: முஹம்மது ஆசிப்
செயலாளர்: துபைல் அஹம்மது
து.செயலாளர்:  முஹம்மது ஷபீக்
பொருளாளர்: முஹம்மது அனீஸ்
இணை பொருளாளர்: நவாஸ் பாசில்