செப்டம்பர் 25, 2021

விசுவக்குடி அணை பாசன கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்


பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (செப்.24) கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.

அப்போது விசுவக்குடி கிராமத்தை சார்ந்த அப்துல் ஹக் என்பவரது தலைமையில் கிராம மக்கள் சார்பாக கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ளது விசுவக்குடி கிராமம்.

இவ்வூரின் அருகே பச்சை மலை மற்றும் செம்மலை இடையே பாய்ந்தோடும் கல்லாற்றின் குறுக்கே சுமார் 40 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் விதமாக விசுவக்குடி அணை ரூ.33.7 கோடி மதிப்பீட்டில் 27.02.2016 அன்று கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 

இந்த இரண்டு மலைகளையும் இணைக்கும் வகையில் 12.30 மீட்டர் உயரம் 665 மீட்டர் நீளத்தில் கரை அமைக்கப்பட்டு அதில் இரண்டு மதகுகள் அமைக்கப்பட்டு பொது பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த மதகுகள் மூலம் இரண்டு பாசன கால்வாய்கள் அமைக்கப்படும் எனவும், அதில் இடது பக்க பாசன கால்வாய் ஆயிரத்து 750 மீட்டர் நீளமும், வலதுபக்க பாசன கால்வாய் 2 ஆயிரத்து 450 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் 5 வருடம் 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பாசன கால்வாய் அமைக்கப்படவில்லை. இதற்கிடையில் விசுவக்குடி அணை இரண்டு முறை நிரம்பி சட்டமன்ற உறுப்பினர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த பாசன கால்வாய் மூலம் விசுவக்குடி, அன்னமங்கலம், தொண்டமாந்துறை போன்ற கிராமங்களில் உள்ள 859 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், பாசன கால்வாய் மூலம் செரிவூட்டப்படும் நீரால் மறைமுகமாக சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதிபெறும்.

தற்போது அணையில் 3 மீட்டர் உயரத்திற்கு சுமார் 10 மில்லியன் கன அடி நீர் தேங்கி நிற்கிறது.

எனவே விளைநிலங்களுக்கு நீர் ஆதாரத்தை உறுதி செய்யும் விதமாகவும், விவசாய பெருமக்கள் பயனடையும் விதமாகவும் கிடப்பில் உள்ள பாசன கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி விவசாயிகள் சார்பாக கேட்டு கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை கோரிக்கை குறித்து குரல்கொடுத்து பேசினார்.

செப்டம்பர் 23, 2021

விசுவக்குடி பகுதி விவசாயிகளுக்கான அறிவிப்பு


அஸ்ஸலாமு அலைக்கும்,

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட மன்றத்தில் நாளை வெள்ளிக்கிழமை (செப்.24) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கிடப்பில் போடப்பட்ட விசுவக்குடி அணை பாசன கால்வாய் பணிகள், கல்லாற்று நீரை பகிர்ந்து கொள்வதில் விசுவக்குடி மற்றும் வெங்கலம் கிராமங்களுக்கு இடையே உள்ள பிரச்சனையை கோரிக்கையாக முன்வைக்க உள்ளோம். (இன்ஷாஅல்லாஹ்)

இதில், விவசாயிகள் சார்பாக பங்கேற்று, குறைகளை தெரிவித்து பயனடையலாம் வாரீர் என அழைக்கிறோம். 

சமூக ஆர்வலர்கள்

•அப்துல் ஹக்

•முஹம்மது ஜகரிய்யா

செப்டம்பர் 21, 2021

விசுவக்குடி ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது விசுவக்குடி கிராமம். 

இவ்வூரின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகே ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியை சுற்றியுள்ள விளை நிலங்களுக்கும் கிணறுகளுக்கும் நீராதரமாக இந்த ஏரி உள்ளது. 

இந்த ஏரி பல ஆண்டுகாலமாக தூர்வாரப்படாததால் கருவேல மரங்களாகவும், மண்மேடுகளாகவும் காட்சி அளிக்கிறது.

எனவே இந்த ஏரியில் உள்ள கருவேல மரங்களையும், மண்மேடுகளையும் அகற்றி ஜே.சி.பி இயந்திரம் கொண்டு தூர்வாரி ஆழப்படுத்தி *இப்பகுதி மக்களின் நீர் ஆதாரத்தை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.






விசுவக்குடி ஏரியின் நடுவில் உள்ள மின் கம்பம் அகற்ற கோரிக்கை


விசுவக்குடி ஏரியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றி மின்சாரத்தை மாற்று வழியில் கொண்டு சொல்லுமாறு வேப்பந்தட்டை உதவி மின் பொறியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன் விவரம்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது விசுவக்குடி கிராமம். 

இவ்வூரின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகே ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியை சுற்றியுள்ள விளை நிலங்களுக்கும் கிணறுகளுக்கும் நீராதரமாக இந்த ஏரி உள்ளது. 

இந்த ஏரியின் நடுவே உள்ள மண்மேட்டின் மீதுள்ள மீன்கம்பம் வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.

மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் நீர்நிலையான இந்த ஏரியில் நீர் நிரம்பினால் மண்மேடு கரைந்து மின் கம்பம் கீழே விழும் அபாயம் உள்ளது.

எனவே நீர் நிலையான ஏரியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றி மின்சாரத்தை மாற்று வழியில் கொண்டு சொல்லுமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவை வேப்பந்தட்டை உதவி மின் பொறியாளர் செந்தில் குமாரிடம் அன்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் செல்வகுமார் வழங்கினார். அப்போது சமூக ஆர்வலர் முஹம்மது ஜகரிய்யா, 2வது வார்டு உறுப்பினர் குதரத்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.