ஜூலை 15, 2017

விசுவக்குடி அரசு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

பெரம்பலூர் மாவட்டம், விசுவக்குடி அரசு தொடக்கப் பள்ளியில் ஜூலை 15 இன்று காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்விற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு நெகமத்துல்லா தலைமை வகித்தார். 

பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி காமிலா, கல்விக்கு கண் திறந்த காமராஜர் அவர்களை பற்றி சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவ மாணவரிடையே நடத்தபட்ட பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் காமராஜர் அவர்களின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், சிறப்பாசிரியர் அருளானந்தம், ராஜ்குமார், மாற்று திறனாளி மாணவரின் தாய் நஜிமா போன்றோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகளும், மதிய உணவாக பொங்கலும் வழங்கப்பட்டது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மாலா ரோஸ்லின் வரவேற்றார். இறுதியாக உதவி ஆசிரியர் பிரான்ஸிஸ் பீட்டர் நன்றி கூறினார்.








ஜூலை 11, 2017

விசுவக்குடி கிராமத்தை  தரம் உயர்த்த கோரிக்கை
அன்னமங்கலம் ஊராட்சியில் இருந்து விசுவக்குடி கிராமத்தை பிரித்து தனி ஊராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி மக்களின் சார்பாக முதலமைச்சரின் குறைத்தீர்க்கும் பகுதியில்  கோரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கோரிக்கை விபரம்:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் அன்னமங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம், அரசலூர், அன்னமங்கலம், பூம்புகார் என 7 கிராமங்களை கொண்டுள்ளது. இங்கு சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

பெரிய ஊராட்சியாக இருப்பதால் விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் போன்ற கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், சாலைவசதி, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் போதுமான அளவு கிடைப்பதில்லை.

வீட்டு வரி, குடிநீர் வரி போன்ற வரிகளை செலுத்தவும், புதிய கட்டிடம் கட்டுவதற்கு அங்கீகாரம் பெறுவதற்கும் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அன்னமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு செல்ல வேண்டி உள்ளதால் இது மிகவும் சிரமமாக இருக்கிறது.

மேலும் விசுவக்குடி மற்றும் அதன் அருகில் உள்ள முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் கிராமங்களில்  சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இதில் சுமார் 1800 வாக்காளர்கள் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இதைவிட குறைவான மக்கள் தொகை உள்ள கிராமங்களான

* Malavarayanallur (633)
* மாவிளங்கை (1106)
* பெருமாத்தூர் ( 1182)
* அகரம் (1,376)
* புது அம்மாபாளையம் (1,446)
* பெரிய வெண்மணி (1469) ஆகியன தனி ஊராட்சியாக இயங்கி வருகின்றது.

பின்தங்கியுள்ள இப்பகுதியை ஊராட்சியாக தரம் உயர்த்தினால் தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சி ஏற்படும்.

எனவே விசுவக்குடியை முதன்மையாக கொண்டு அருகில் உள்ள முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் கிராமங்களையும் இணைத்து புதிய ஊராட்சி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜூலை 09, 2017

விசுவக்குடி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தல்.!

பெரம்பலூர் மாவட்டம், விசுவக்குடியில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கிவருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.

சமீப காலமாக இந்த பள்ளியின் மாணவர்களின்  எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவது மிகவும் கவலை அளிக்கிறது. தற்போதைய கல்வி ஆண்டில் வெறும் 24 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.

இதனிடையே இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மாலா ரோஸ்லின் தனியார் பள்ளிகளுக்கு நிகராக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:

* கல்வியின் தரத்தை மேம்படுத்தும் விதமாக குறுந்தகடுகள் வழியாக ஆங்கிலம் எழுதவும், பேசவும் பயிற்சி அளிக்கிறோம்.

* விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்படும் வகையில் வாழை மற்றும் காய்கறி தோட்டம் அமைத்து மாணவர்களை கொண்டே பராமரிக்க செய்கிறோம்.

* சுற்று சூழலை காக்கும் விதமாக பள்ளி வளாகத்தில் ஏராளமான மரங்களை வளர்த்து வருகிறோம்.

* மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக அறிவியல் கண்காட்சிகளையும் நடத்தி வருகிறோம்.

* சமையல் கூடம், கழிப்பறை, சுற்றுசுவர் என உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி உள்ளோம்.

*  RO Water Plant முறையில் மாணவர்களுக்கு சுத்திகரிக்கபட்ட குடிநீர் வழங்கி வருகிறோம்.

* குடியரசு தினம், சுதந்திர தினம் என அனைத்து விழாக்களையும் தவறாமல் நடத்தி வருகிறோம்.

இதுபோன்ற முயற்சிகளால் இப்பள்ளி மாணவர்கள் வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் தங்களின் செயல் திறனை நிரூபித்து பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர்.

மேலும் பள்ளியில் மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது.  விலையில்லாமல் சீருடைகளும், புத்தகங்களும் அரசால் வழங்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளின் மீது மோகம் கொண்டு உங்களின் பொருளாதரத்தை வீணடிக்க வேண்டாம்.  எனவே மாணவர்களை விசுவக்குடி அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்து இப்பள்ளியின் வளர்ச்சிக்கு ஆதரவு தருமாறு இப்பகுதி மக்களை கேட்டு கொண்டார்.