|
பணிகள் முடிந்த திட்டங்களுக்கு மீண்டும் டெண்டர் அறிவிப்பு ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதால் டெண்டரை ரத்து செய்யக்கோரி விசுவக்குடி கிராமத்தினர் பெரம்பலூர் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது விசுவக்குடி கிராமம். இவ்வூரைச் சேர்ந்த முன்னாள் அன்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக் தலைமையில் விசுவக்குடி ஜமாத் பொருளாளர் அமானுல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் குதரத்துல்லா உள்ளிட்ட பலர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, கலெக்டரிடம் சாந்தாவிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது,
அன்னமங்கலம் ஊராட்சி, விசுவக்குடி கிராமத்தில் போதிய மழை இல்லாததால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே இங்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக விசுவக்குடி தொடக்கப்பள்ளியின் அருகே உள்ள ஊரணி - குளத்தில் புதிய கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ரூ 18.71 லட்சம் மதிப்பில் 2018 - 2019-ம் ஒன்றிய பொது நிதியில் புதிய கிணறு அமைத்தல், சுற்றுச்சுவர் கட்டுதல், மின்மோட்டார் அமைத்தல், பம்ப்ரூம் கட்டுதல் மற்றும் பைப்லைன் அமைத்தல் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
கிணறு மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் மட்டும் முடிந்துள்ள நிலையில் நேற்று திங்கட்கிழமை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மின்மோட்டார் அமைத்தல், பம்ப்ரூம் அமைத்தல் மற்றும் பைப்லைன் அமைத்தல் போன்ற அதே பணிகளுக்காக ரூபாய் 27 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் மீண்டும் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய மதிப்பில் உள்ள மின்மோட்டார் மற்றும் பைப்லைன் போன்றவை அமைக்காமல் செலவு செய்யப்பட்டு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த புதிய டெண்டர் மூலம் பொதுமக்கள் பணம் வீணடிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த ஒப்பந்தத்தை அனுமதித்தால் ஊழலுக்கு வழிவகுப்பதாகவே அமையும்.
மேலும் தற்போது ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து தகுந்த நீராதாரம் உள்ள இடத்தை தேர்வு செய்து, புதிய கிணறு வெட்டி, விசுவக்குடி கிராமத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
 |