டிசம்பர் 30, 2023

விசுவக்குடி குடியிருப்பு பகுதிகளில் கொசு மருந்து அடிப்பு


 அன்னமங்கலம் ஊராட்சி விசுவக்குடி இரண்டாவது வார்டில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இன்று டிசம்பர் 30 கொசு மருந்து அடிக்கப்பட்டது. இதற்கான பணியில் சைக்கிளில் ஊராட்சி பணியாளர் கிருசுணன் ஈடுப்பட்டார்.


டிசம்பர் 07, 2023

விசுவக்குடியில் சேதமடைந்து, உயரம் குறைவாக உள்ள மின் கம்பி - சீரமைக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த மூன்று தினங்களில் மின்சார வாரியம் நிறைவேற்றியது. பொது மக்கள் பாராட்டு


கடந்த திங்கட்கிழமை டிசம்பர் 4 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 

அதில் விசுவக்குடியை சார்ந்த முகமது சபீக், முகமது ஆசிப், முகமது அனீஸ், முகமது பாசில் மற்றும் நசுருதீன் போன்ற சமூக ஆர்வமுள்ள இளைஞர்கள் 4 விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் மின்சார வாரியம் தொடர்பான மனுவும் ஒன்று. அதன் விவரம் வருமாறு...

பெரம்பலூர்  மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில்  விசுவக்குடி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும்  அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு பள்ளிவாசல் அருகிலுள்ள அல் ஜன்னத் சமுதாய நலக்கூடம் எதிரே உள்ள மின்சாரம் வழங்கும் மின் கம்பிகள் பாழடைந்து மிகவும் சேதமடைந்து தாழ்வாகவாக உள்ளது. 

இந்த சேதமடைந்த மின்கம்பிகள் மூலம்  மின் விநியோகம் பெறும் வீடுகளில் அடிக்கடி குறைந்த அளவு மின்சாரம் வருகிறது. இதனால் இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் மின் சாதனங்கள், உபயோகப் பொருட்கள் பழுதடைந்து வருகிறது. 

மின் கம்பி குறைவான உயரத்தில்  உள்ளதால்  சோளம் முட்டை ஏற்றி வரும் லாரி, வைக்கோல் போர் ஏற்றி வரும் டிராக்டர், செல் அறுவடை இயந்திரம் போன்ற வாகனங்களை சென்றால் உரசி  மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. 

மேலும் இந்த வழியாக தான்   சிறுவர்  சிறுமியர்கள் பள்ளிக்கூடம் சென்று வருவதால் மின் கம்பி திடீரென அறுந்து விழுந்து விடுமோ? என மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

எனவே ஏதேனும் மின் விபத்து ஏற்பட்டு உயிர்காவு வாங்குவதற்கு முன்னர்  மின்கம்பியை உயர்த்தி கட்டியும், சேதமான மின் கம்பியை புதிதாக மாற்றி  மின்சார வாரியம்  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இந்த மனு கிடைக்கப்பெற்ற மூன்று தினங்களுக்குள் மின்சார வாரியம் புதிய மின்கம்பம் ஒன்றை அமைத்து தாழ்வாக சென்ற மின்கம்பியின் உயரத்தை அதிகப்படுத்தி நடவடிக்கை எடுத்தனர்.

இதனால் மின்வாரியத்தை சேர்ந்த வேப்பந்தட்டை உதவி மின் செயற்பொறியாளர் செந்தில் குமார், மின் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் மின்சார வாரிய ஊழியர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டிய வருகின்றனர்.

அதேபோல்  பழுதான பழைய மின் கம்பிகளையும் உடனடியாக மாற்றுமாறு மின்சார வாரியத்திற்கு பொது மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.



அக்டோபர் 15, 2023

விசுவக்குடியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

 


வடகிழக்கு பருவமழை தாமதமாகி வருவதால் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் தற்போது கடுமையான வறட்சி  நிலவி வருகிறது.

 அக்டோபர் முதல் டிசம்பர் இறுதி வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த காலகட்டத்தில் தான் பரவலாக அதிக அளவில் மழைப்பொழிவு கிடைக்கும். ஆனால் அக்டோபர் மாதம் தொடங்கி 15 நாட்கள் ஆன நிலையில் இன்னும் வடகிழக்கு பருவமழை தொடங்காமல் உள்ளது.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் கவலையடைந்து வருகின்றனர். கால்நடைகளுக்கு புற்கள் கூட இல்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

எனவே மழை பெய்ய வேண்டி விசுவக்குடியில் சிறப்பு தொழுகை நடத்த ஜமாத்தார்கள் முடிவு செய்தனர். அதன்படி, இன்று காலை 8 மணி அளவில் விசுவக்குடி களத்துமேடு பகுதியில் வறட்சி நீங்க, மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தொழுகையை விசுவக்குடி அத்-தக்வா பள்ளிவாசலின்  இமாம் முஹம்மது சுலைமான் தலைமை தாங்கி நடத்தினார். அதனைத் தொடர்ந்து பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.





செப்டம்பர் 11, 2023

விசுவக்குடி முதல் தெருவில் "சிமெண்ட் பேவர் பிளாக்'" சாலை அமைத்து தர கோரிக்கை


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி கிராமம்  உள்ளது.  இங்குள்ள முதல் (தெற்கு) தெருவில் சுமார் 50க்கும் அதிகமான வீடுகளில் சுமார் 200க்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார்  15 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த சுமார் 150 மீட்டர் தார்சாலை சேதமடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து கரடுமுரடாக உள்ளது. 

இந்த தெரு சாலையை பயன்படுத்தி தான் ஊராட்சி ஓன்றிய தொடக்கப் பள்ளி, சமுதாய நலக்கூடம், தொழுகைக்காக பள்ளிவாசல், அடக்க தளம், விவசாய நிலங்கள் போன்றவைகளுக்கு  சென்றுவர பயன்படுத்தப்படுகிறது.

வெயில் காலங்களில் இந்த தெரு சாலை புழுதியாகவும், மழை காலங்களில்  சேறும் - சகதியுமாக இருப்பதனால் இந்த தெருவில்  நடந்து செல்வதற்கு இங்குள்ளவர்கள்  குறிப்பாக சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் மிகவும் சிரம படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் வழுக்கிவிழும் அபாயம் உள்ளதால் அவதிக்கு உள்ளாகின்றனர். 

எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி விசுவக்குடி முதல் (தெற்கு) தெருவின் இருபுறமும்  சாக்கடை வசதியுடன் புதிதாக சிமெண்ட்  'பேவர் பிளாக்' சாலை அமைத்து தர, வேண்டுமென விசுவக்குடியில் உள்ள சமூக ஆர்வலர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

விசுவக்குடியில் 4-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கலெக்டரிடம் மனு


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அன்னமங்கலம் ஊராட்சியின் வார்டு எண் 2 மற்றும் 3 என இரண்டு ஊராட்சி வார்டுகள் உள்ளது.

இங்குள்ள 2வது வார்டில்  உள்ள  வடக்கு (4வது) தெருவில்  சுமார் 50க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்ந தெருவின் ஒருபகுதியில் கிழக்கு திசையில் இதுவரை சாக்கடை வசதி இல்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர் போன்றவர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிலர்  சாலையோரம் குழி தோண்டி, சாக்கடை நீரை  தேக்கி வைத்துள்ளனர். அதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தி அதிகமாகி கொசு தொல்லை பெருகி வருகிறது. 

வடிகால் இல்லாததால் மழை காலங்களில் அதிகப்படியான மழையால் சாக்கடை கலந்த மழைநீர் குடியிருப்புகளில் புகுந்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே டெங்கு, மலேரியா  போன்ற நோய்களில் இருந்து இப்பகுதி மக்களை பாதுகாக்கும் விதமாக வருகிற மழை காலத்திற்கு முன்பாக அடிப்படை வசதியான சாக்கடை வசதியை செய்து தருமாறு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது

செப்டம்பர் 08, 2023

விசுவக்குடியில் கழிவுநீர் கால்வாய் பாலம் சேதம் - விபத்து ஏற்படும் அபாயம் - உடனடியாக சீரமைக்க கோரிக்கை


வேப்பந்தட்டை ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சியின்  2வது வார்டு விசுவக்குடி 3வது தெருவில் சுமார் 200க்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த தெருவின் ஆரம்பம் மற்றும் முடிவில் உள்ள கழிவுநீர்  பாலம் உடைந்து,  பள்ளம் விழுந்து சுமார் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பலமுறை கோரிக்கை வைத்தும் ஊராட்சி நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நடந்து செல்பவர்களும், இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

பள்ளி சென்றுவரும்  குழந்தைகள், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பேருந்து நிறுத்தம் சென்று வருபவர்கள் மற்றும் வீட்டு தேவைகளுக்காக கடைகளுக்கு சென்று வருபவர்கள்  இந்த பாலத்தை கடந்துதான் சென்றுவர வேண்டும். 

மெயின் ரோட்டில் இருந்து குறுக்கு தெருவாக வளைந்தவுடன் திடீரென பள்ளம் இருப்பதை கவனிக்க முடியாமல் புதிதாக வரும் வாகன ஓட்டிகள்  விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

இந்த கழிவுநீர் பாலம் மிகவும் சேதம் அடைந்துள்ளதால் , இதனால் கனரக வாகனங்கள், ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை 3வது தெருவுக்குள்  வர சிரமமாக உள்ளது. இதனால் இந்த தெரு மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

எனவே சேதமடைந்த இந்த கழிவுநீர் கால்வாய் பாலத்தை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் சார்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



ஜூன் 19, 2023

விசுவக்குடியில் மறைந்த தொண்டரின் உருவப்படத்திற்கு ஆ ராசா அஞ்சலி

விசுவக்குடியில் மறைந்த திமுக தொண்டர் நெகமத்துல்லாவிற்கு இன்று (ஜூன் 19) திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் தற்போதைய நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.யுமான ஆ ராசா நேரில் சென்று உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி பின் குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவித்தார். 

Video 👇


ஜூன் 15, 2023

கடன் வாங்கி ஏமாற்றிய ஆசிரியர் பள்ளிக்கு வர எதிர்ப்பு


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் கடந்த கல்வியாண்டில் இப்பள்ளியில் பணிபுரிந்தபோது பொதுமக்களிடம் வட்டிக்கு கடனாக பல லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பணத்தை திருப்பி தராமல் அரும்பாவூர் பள்ளிக்கு பணி மாறுதலாகி சென்று விட்டார்.


இந்தநிலையில் மீண்டும் விசுவக்குடி பள்ளிக்கு பணி மாறுதலாகி நேற்று வேலைக்கு வந்தார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியர் இந்தப் பள்ளியில் பணிபுரிய கூடாது. பணிக்கு வந்தால் நாங்கள் பள்ளியை இழுத்துப்பூட்டுவோம் என கூறி முற்றுகையிட்டனர்.

இதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மாலா ரோஸ்லின் இந்த தகவலை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அம்சவள்ளிக்கு தெரிவித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி தொடக்க கல்வி அலுவலர் அம்சவள்ளி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது விரைவில் இந்த பள்ளியில் இருந்து அந்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்படுவார் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

- நன்றி: தினத்தந்தி 

https://www.dailythanthi.com/News/State/the-teacher-who-took-a-loan-and-cheated-protested-to-come-to-the-school-986551

மே 31, 2023

2 மணி நேரத்தில் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு

 


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு முடிவு செய்து அதற்கான அனுமதி கடிதம் மாவட்ட நிர்வாகத்திடம் ஒரு மாதத்திற்கு முன்பு கொடுக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் திடீரென மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வந்தது. இந்த அறிவிப்பால் விழாக் குழுவினர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 

வெளியூர்களிலிருந்து ஜல்லிக்கட்டு காளைகள் நேற்று முன்தினமே வந்தது. இந்த காளைகளின் உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று விட்டனர். 

அதன் பின்னர் இரவு 11 மணி அளவில் விழா குழுவினருக்கு நேற்று மதியம் 1 மணிக்கு மேல் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்ற அனுமதி மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து வந்துள்ளது.

அதன் பிறகு ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்தில் ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதனால் நேற்று மதியம் 1 மணி வரை வாடிவாசலில் வீரர்கள் இல்லாமலும், பார்வையாளர்கள் மாடத்தில் ரசிகர்கள் இல்லாமலும் வெறிச்சோடி காணப்பட்டது. 

இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி சந்திரசேகர் விழா மேடைக்கு மதியம் 1:30 மணி அளவில் வந்தார். அதன் பிறகு பொதுமக்களிடம் ஓரளவுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற நம்பிக்கை வந்தது. 

ஆனாலும் சென்னையில் இருந்து உரிய அனுமதி இன்னும் வரவில்லை எனவும், அனுமதி வந்தவுடன் ஜல்லிக்கட்டு நடத்தலாம் எனவும் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.

அதன் பிறகு நேரம் செல்ல செல்ல திக்... திக்... என விழா குழுவினர், வீரர்கள், பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டது. அதன் பிறகு மாலை 3 மணி அளவில் அனுமதி பெறப்பட்டது என கூறி ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.

வீரர்கள் உற்சாகத்துடன் மாடுகளை பிடித்தார்கள். பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த பொதுமக்கள் கைத்தட்டி வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். மாலை 3 மணி அளவில் தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு 5 மணி அளவில் முடிவுக்கு வந்தது. 

இதில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த 235 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. 120 வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினார்கள். 

இதில் மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், சில்வர் பாத்திரம், கட்டில் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. 

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு அங்கு இருந்த மருத்துவ குழுவினர்கள் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 

பாதுகாப்பு ஏற்பாடுகளை அரும்பாவூர் போலீசார் செய்திருந்தனர்.

மார்ச் 10, 2023

விசுவக்குடியில் புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு


 விசுவக்குடியில் தடையில்லா மின்சாரம் வழங்க 12வதாக 63 kv திறன் உள்ள புதிய மின் மாற்றி அமைத்து, இயக்கி வைக்கப்பட்டது

விசுவக்குடியில் குறைந்த மின்னழுத்த பிரச்சினை காரணமாக மின்சார உபகரணங்களை சரியாக இயக்க முடியாத சூழல் நிலவி வந்தது.

இதனைத் தொடர்ந்து மின்சார வாரியத்திற்கு புதிய மின்மாற்றி அமைக்க வேண்டி கோரிக்கை எழுப்பப்பட்டது. 

கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய மின்மாற்றி அமைத்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்து வைக்கப்பட்டது.

இந்த புதிய மின்மாற்றியை பெரம்பலூர் மாவட்ட  செயற்பொறியாளர் இயக்கலும் காத்தலும் அசோக் குமார், பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் கிராமியம் செல்வராஜ் ஆகியோர் பொதுமக்கள் முன்னிலையில் இயக்கி வைத்தனர்.

வேப்பந்தட்டை உதவி மின் பொறியாளர் செந்தில்குமார், குரும்பலூர் உதவி மின்பொறியாளர் பிரபாகரன், மின் ஆக்க முகவர் (மின்சார போர்மேன்) வேணுகோபால், மின்பாதை ஆய்வாளர் சுரேஷ் மற்றும் செந்தில்குமார்,மின்சார வாரிய ஊழியர்கள் உடன் இருந்தனர்.

மேலும் அன்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் விசுவக்குடி ஜமாத் நிர்வாகத்தின் சார்பாக மின்சார வாரியத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.















ஜனவரி 22, 2023

புதிய மின் மாற்றி மக்களின் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?


விசுவக்குடி 4வது வீதியில் உள்ள வீடுகளில் குறைந்த மின்னழுத்த குறைபாடு தற்போது வரை ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. 

இதனால் பாதிக்கப்பட்ட கிராம பொதுமக்கள் கடந்த ஜூலை 23ஆம் தேதி சனிக்கிழமை காலை திடீரென பேருந்து மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மின்சார வாரிய ஊழியர்கள் இந்த பிரச்சனையை சரி செய்யும் விதமாக புதிய மின் மாற்றி அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

அப்போது பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக புதிய மின்மாற்றி அமைக்க மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.

(புகார் பதிவு எண்: Petition No 2022/9005/16/394445/072)

கடந்த ஆறு மாதம் ஆன நிலையில் தற்போது தான் தாமதமாக புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இது மக்களின் பயன்பாட்டிற்கு எப்போது  அர்ப்பணிக்கப்படும் என தெரியவில்லை?

எனவே விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு புதிய மின்மாற்றியை அர்ப்பணிக்குமாறு பொதுமக்களின் சார்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

ஜனவரி 21, 2023

விசுவக்குடியில் தொல்லை செய்த குரங்குகள் - கூண்டு வைத்து பிடித்த வனத்துறை


விசுவக்குடியில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை குரங்குகள் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தன. 

இதனால் குரங்குகளை பிடித்து சரணாலயத்தில் விட வேண்டுமென விசுவக்குடி பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வேப்பந்தட்டை வனத்துறையின் சார்பில் விசுவக்குடியில் உள்ள சுமார் 80-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு ஆத்தூர் அருகே உள்ள முட்டல் வனப்பகுதியில் விடப்பட்டது.

நன்றி 🙏

•வனப் பாதுகாவலர் வெங்கடேஷ்

•ராஜா முஹம்மது 

•ஷெரிஃப் 

•ஜாபர் அலி 

•ராஜேந்திரன்

மற்றும் ஒத்துழைப்பு வழங்கி உதவியவர்கள்...

Video👇



ஜனவரி 05, 2023

விசுவக்குடியில் புதிய சாலை ஆய்வு

 

விசுவக்குடி மற்றும் முகமது பட்டினத்தில் ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தில் (TNRRIS) அமைக்கப்பட்ட சாலைகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் தாரேஷ் அகமது (ஜனவரி 05) இன்று ஆய்வு செய்தார்.

Video 👇