பிப்ரவரி 02, 2022

விசுவக்குடியில் அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வைத்த 10 பேர் மீது வழக்கு


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஊராட்சி விசுவக்குடியில் நேற்று முன்தினம் இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் கிளை செயலாளர் செல்வராஜ் தலைமையில் கட்சியினர் 5 அடி உயரம் உள்ள அம்பேத்கர் சிலை ஒன்றை கொண்டு வந்தனர். 

பின்னர் அதனை விசுவக்குடி- அன்னமங்கலம் சாலை அருகே போலீஸ் அனுமதி பெறாமல் இரவோடு இரவாக வைத்தனர். 

இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரும்பாவூர் போலீசார் சிலை வைத்தவர்களிடம், அனுமதி இல்லாமல் சிலை வைக்கக்கூடாது எனவே சிலையை அகற்ற வேண்டும் என்று கூறினார்கள்.

அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடியும் வரை சிலையை மூடி வைத்து விடுவது எனவும், அதன்பிறகு உரிய அனுமதி பெற்று சிலையை திறந்து கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

 அதன் பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அனுமதி இல்லாமல் சிலை வைத்ததாக செல்வராஜ் உள்பட 10 பேர் மீது அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.