ஏப்ரல் 22, 2017

இரங்கல் செய்தி

விசுவக்குடியில் உள்ள முதல்  தெருவில்  சகாபுதீன் என்பவர் வசித்து வருகிறார். தற்போது சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். அதில் இளைய மகன் முஹம்மது ஆகில் என்ற சிறுவனுக்கு மூனறை வயதாகிறது.

முஹம்மது ஆகில் உடல்நலம் பாதிக்கபட்டு இருந்தார்.இதனால் சிகிச்சைகாக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தார். இன்று சிகிச்சை பலனளிக்காமல் இயற்கை எய்தினார். இதனால் அவரின் குடும்பமே சோகத்தில் உள்ளது.

சிறுவனின் மறுமை வாழ்விற்காக ஏக இறைவனை பிரார்தனை செய்வோமாக.

ஏப்ரல் 21, 2017

விசுவக்குடி இக்ரா தீனியாத் பாடசாலை இரண்டாம் ஆண்டு விழா

விசுவக்குடி இக்ரா தீனியாத் பாட சாலையின் இரண்டாம் ஆண்டு விழா வருகிற 28ம் தேதி வெள்ளி கிழமை நடைபெறுகிறது.

விசுவக்குடி அல்-ஜன்னத் சமுதாய நலக்கூடத்தில் மாலை 5 மணியளவில் நடைபெறும் இந் நிகழ்வை பெரம்பலூர் மாவட்ட ஜமாத்துல் உலாமா சபை தலைவர் மௌலானா முஹம்மது முனீர்  தலைமை ஏற்று நடத்துகிறார்.

விசுவக்குடி ஜமாத் தலைவர் முஹம்மது மீரா, பெரம்பலூர் இர்ஷாதுல் உலூம் அரபு கல்லூரியின் முதல்வர் மௌலானா இஹ்ஷானுல்லா, மௌலானா அப்துல் ஹை போன்றோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.

ஐக்கிய நலக் கூட்டமைப்பின் செயலாளர் மற்றும் அன்வாருல் சைஃப்பா மக்தப் வழிகாட்டியின் பொறுப்பாளர் முஹம்மது ரஃபீ ஹாஜியார் சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.

மேலும் மாணவ, மாணவியரின் செயல் திறனை வெளிபடுத்தும் விதமாக நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

பெண்களுக்கு தனி இடவசதி செய்யபட்டுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு விசுவக்குடி ஜமாத், அல்- அமீன் இளைஞர்கள் சங்கம் மற்றும் இக்ரா தீனியாத் பாடசாலை சார்பாக அழைப்பு விடுக்கப்படுகிறது.


ஏப்ரல் 10, 2017

கூடுதல் நடைகள் இயக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் கிராமங்களுக்கு அரசு பேருந்தை கூடுதல் நடைகள் இயக்க வலியுறுத்தி விசுவக்குடி ஜமாத் தலைவர் முகமது மீரான் தலைமையில் (10.04.2017) அன்று கலெக்டரிடம் மனு அளிக்கபட்டது.

அப்போது ஜமாத் நிர்வாகிகள் குதரத்துல்லா, அப்துல் அலிம் மற்றும் அல் அமீன் சங்க தலைவர் முகமது முபாரக் உடன் இருந்தனர்.

மனுவின் விபரம்:

பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்கள் வீட்டு தேவைக்கும், வேலைக்கு செல்வதற்கும், மருத்துவ வசதிகளை பெறுவதற்கும் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மாவட்ட தலைநகரான பெரம்பலூர் நகருக்கு செல்ல வேண்டும்.

எனவே அரசு 11பி என்ற நகர பேருந்தை ஒரு நாளைக்கு 9 நடைகள் இயக்கி வருகிறது. அதில் 7 நடைகள் மட்டுமே விசுவக்குடி வழித்தடத்தில் பிள்ளையார் பாளையம் வரை இயக்கப்படுகிறது.

மீதி இரண்டு நடைகள் அன்னமங்கலம் கிராமத்துடன் திரும்பி செல்கிறது. இந்த இடைபட்ட நேரத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை மூன்று மணி நேரங்களுக்கு இந்த கிராமங்களில் பேருந்துவசதி இல்லை. இதனால் காத்திருப்பது மட்டுமில்லாமல் நேரமும் விரயமாகிறது.

இந்த நேரங்களில் பயணம் செய்ய வேண்டும் என்றால் பிள்ளையார் பாளையத்தில் இருந்து 4கிலோ மீட்டர் நடந்து அன்னமங்கலம் செல்ல வேண்டி உள்ளது.
இதனால் வயதானவர்கள், நோயாளிகள், பெண்கள் போன்றோர் மிகவும் சிரமபட்டு வருகின்றனர்.
மற்ற நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் கூட்டத்தின் காரணமாக பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் உட்பட படிகளில் பயணம் செய்கின்றனர். இதனால் உயிர் இழப்பு ஏற்பட கூடிய அபாயமும் உள்ளது.

எனவே மதியம் 12மணிக்கும், மாலை 06:55 மணிக்கும் அன்னமங்கலத்துடன் திரும்பி செல்லும் 11 பி அரசு பேருந்தை பிள்ளையார் பாளையம் வரை போக்குவரத்து நீட்டிப்பு செய்ய வேண்டும்.

இதனால் விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் கிராம வாசிகளுக்கு கூடுதல் பேருந்துவசதி கிடைக்கும்.

எனவே மாவட்ட ஆட்சியர் ஆகிய நீங்கள் இப்பகுதி மக்களின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்

ஏப்ரல் 09, 2017

தலைவர்- அறிமுகம்

 விசுவக்குடி புதிய ஜமாத் தலைவராக சேட் (எ) முஹம்மது மீரா (07.04.2017) அன்று தேர்வாகி உள்ளார்.  விசுவக்குடியை பூர்வீகமாக கொண்டவர்.  தற்போது இங்குள்ள முஸ்லிம்களை வழிநடத்தி செல்பவர்.

14-04-1972 ஆம் ஆண்டு ஜெய்னுலாப்தீனுக்கும், உம்மு சல்மாபிக்கும் மூன்றாவது மகனாக பிறந்தவர்.

இவருக்கு 2 சகோதரிகளும், 2 சகோதரர்களும் உள்ளனர். இவரின் தந்தை தமிழக காவல்துறையில் பணியாற்றியவர்.

10ம் வகுப்புவரை அன்னமங்கலம் சிறுமலர் மேல்நிலை பள்ளியிலும், தஞ்சாவூரில் தொழில்நுட்ப கல்வியும் பயின்றவர்.

திருகுரான் படிக்க தெரிந்தவர். ஐந்து வேளைகள் தொழுகையை நிறைவேற்ற கூடிய மார்க்கபற்று உள்ளவர்.

இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். 25 ஆண்டுகள் சவூதி அரேபியாவில் பணியாற்றியவர்.

சமூக ஆர்வலரான இவர் தன்னுடைய மூத்த மகளை பொறியியல் பட்டதாரியாகவும் உருவாக்கி வருகிறார்.

புதிதாக ஜமாத் தலைவராக பொறுபேற்றுள்ள இவர் நிர்வாகத்தில் வெளிபடை தன்மை கடைபிடிக்கபடும் என தெரிவித்து வருகிறார்.

சிறப்பாக செயல்பட அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு தருமாறும் கேட்டு கொண்டார்.

ஏப்ரல் 07, 2017

புதிய நிர்வாகிகள் தேர்வு

விசுவக்குடி ஜமாத் தலைவராக இருந்த ஷேக் அப்துல் ஹமீத் அவர்கள் கடந்த 2013 ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் தேதி உடல் நல குறைவால் இயற்கை எய்தினர்.

அடுத்த தலைவராக காதர் அலி அவர்கள் 4ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில் ஜமாத் நிர்வாகத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது அமைக்கப்பட்ட புதிய நிர்வாக குழுவில் தலைவராக முஹம்மது மீரா, செயலாளராக குதரத்துல்லா, பொருளாளராக அப்துல் அலிம் போன்றோர் தேர்வாகி உள்ளனர்.

தற்போதைய புதிய நிர்வாகம் மார்க்கம், ஊரின் வளர்ச்சி போன்ற விசயங்களில் சேவையை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது..

ஏப்ரல் 05, 2017

விசுவக்குடியில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
 இக்ரா தீனியாத் பாடசாலை, தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைந்து நடத்தும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நாளை (ஏப்ரல் 06) வியாழ கிழமை விசுவக்குடி சமுதாய நலக் கூடத்தில் நடைபெறுகிறது.

தற்கால சூழலுக்கு ஏற்ற படிப்புகள் குறித்த அரிய ஆலோசனைகளை காணொளி காட்சி மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாலிகண்டபுரம் அன்னை ஆயிஷா பெண்கள் மற்றும் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் சம்சுதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.

உயர்கல்வி வழிகாட்டி ஆலோசகர்களான தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் முஹம்மது இஸ்மாயில் மற்றும் லயானிஷா போன்றோர் பங்குபெறுகின்றனர்.

10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு விளக்கம் பெறலாம்.

இந்நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது.

ஏப்ரல் 02, 2017

விசுவக்குடியில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 11 பேர் காயம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள விசுவக்குடியில் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்து விழாக்குழுவினரும், பொதுமக்களும் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

பின்னர் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் பகுதியை பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், வேப்பந்தட்டை தாசில்தார் முத்துவீரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து அனுமதி வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து விசுவக்குடியில் நேற்று  (01.04.2017) ஜல்லிக்கட்டு நடந்தது. முதலில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் அரசு டாக்டர்களை கொண்டு முறையான மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

பின்னர் வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர்.
அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது.

11 பேர் காயம்
°°°°°°°°°°°°°°°°°°°°
இதில் அன்னமங்கலம், தொண்டமாந்துறை, விசுவக்குடி, முகமதுபட்டிணம், திருச்சி மாவட்டம் இருங்கலூர், ஈச்சம்பட்டி, சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, கூடமலை, ஆத்தூர், கெங்கவல்லி, மங்கப்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் முட்டியதில் சேலம் மாவட்டம் கம்மம்பட்டியை சேர்ந்த சேகர் (வயது 23), பெரியம்மாபாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் (33), அன்னமங்கலத்தை சேர்ந்த மதளைமுத்து (45), பூலாம்பாடியை சேர்ந்த கார்த்திக் (20), அருண் (24) உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். அவர் களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசுப்பொருட்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு விழாக்குழுவினரால் வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், மின்விசிறி, வேட்டி, ரூ.5 ஆயிரம் வரை யிலான பணமுடிப்பு போன்ற பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

இதேபோல் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த காளைகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

தண்ணீர் பந்தல்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஜல்லிக்கட்டு போட்டியை பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருச்சி, கடலூர், அரியலூர், வேப்பந்தட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்களுக்கு விழாக்குழு சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. பாதுகாப்பு பணியில் அரும்பாவூர் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
**********************
நன்றி
தினத்தந்தி

http://www.dailythanthi.com/News/Districts/2017/04/02021153/11-people-injured-in-the-jallikattu-Rampaged-vicuvakkuti.vpf







விசுவக்குடியில் ஆங்கிலேயர் கால தொழில்!

இயற்கையாக அவுரி சாயத்தை தயாரிக்கும் பழமை வாய்ந்த தொழில் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள விசுவக்குடி கிராமத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைப்பெற்றுள்ளது.

இக் கிராமம் சாயத் தொழிலில் சிறந்து விளங்கியது மட்டுமில்லாமல், இதை சார்ந்த மக்களுக்கும் வாழ்வளித்துள்ளது. நமது கிராம மக்கள் பண்டைய நாட்களில் இருந்தே தங்கள் துணிகளுக்கு அவுரி செடி மூலம் சாயம் தேய்த்து வந்தனர்.

இந்தியாவில் சாயமேற்றும் முறை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தொல்பொருள் துறையும் கூறுகின்றது. இதுபோல் இயற்கையான முறையில் சாயமேற்றப்படும் நமது துணி உலகப் பிரசித்தி பெற்றது. இதனால் நமது பருத்திக்கும், அவுரிக்கும் ஆசைப்பட்டே ஆங்கிலேயர்கள் இங்கே வந்ததாகவும் கூறுவர்.

ஆங்கிலத்தில் இண்டிகோ என அழைக்கபடும் அவுரி செடி ஒராண்டு தாவரமாக இரண்டு மீட்டர் உயரம் வரை வளர கூடியது. இந்த செடியின் இலையை நீரில் ஊற வைத்து புளிக்க செய்து நீல சாயம் பெற அவுரி தொட்டிகளை பயன்படுத்தினர்.

விசுவக்குடி கிராமத்தில் செங்கல் மற்றும் காரைகளால் கட்டப்பட்டு தற்போது சிதிலமைந்து காணப்படும் அவுரி சாயத் தொட்டி 19ம் நூற்றாண்டை சேர்ந்தாக இருக்கலாம் கருதப்படுகிறது.

இப்பகுதியில் அவுரி செடி விவசாயத்திற்கு தேவையான நல்ல சுண்ணாம்பு மண், நல்ல தட்ப வெப்பநிலை, நல்ல நீர்வளம் போன்றவை சிறந்து விளங்கியுள்ளது.

ஆனால் திருப்பூர் சாய கழிவுகளை போல இவை எந்த பாதிப்பையும் தரவில்லை. ஏனெனில் அவுரி 18 வகை விஷங்களை போக்கும் ஒரு மூலிகை மற்றும் உரமாகவும் இருந்துள்ளது.

இப்படி வரலாற்றில் இடம் பிடித்திருந்த அவுரி சாயத் தொழில் செற்கை சாயங்களின் வருகையால் அழிய தொடங்கியது. இத் தொழில் மட்டுமல்ல இதை தெரிந்த மேதைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும் நாம் அறியும் முன்பே இருந்தும், இறந்தும் போய்விட்டனர்.

டை, கலரிங், கெமிக்கல் என உயிருக்கு உளை வைத்து கொள்ளாமல் நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட எந்த பக்க விளைவும் இல்லாத அவுரி சாயத் தொழிலை மீண்டும் மீட்க முடியுமா என்று தெரியவில்லை? ஆனால் நினைத்து பார்க்க முடியும்.

- தௌ.மு.ஜகரிய்யா
Visvakudipost@gmail.com

ஏப்ரல் 01, 2017

விசுவக்குடி ஜல்லிகட்டு ஆல்பம் 2017
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் விசுவக்குடியில்  01.04.2017 அன்று ஜல்லிகட்டு நடைப்பெற்று. இதில் 187 காளைகள் சீறிபாய்ந்தன.