நவம்பர் 30, 2022

விசுவக்குடியில் மீண்டும் சேதமடைந்த கடக்கால்... ஏரிக்கரை உடையும் அபாயம்


சேதமடைந்த கடக்கால்

பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவக்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகே ஏரி ஒன்று உள்ளது. ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த ஏரி சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். சுற்றியுள்ள விளை நிலங்களுக்கும், கிணறுகளுக்கும் இந்த ஏரி நீர் ஆதாரமாக உள்ளது.

இதற்கிடையே இந்த ஏரியின் உபரிநீர் வெளியேற்றப்படும் கடக்கால் பகுதி பலவீனமாக இருந்தது. இதனை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் முதல்-அமைச்சருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

கரை உடையும் அபாயம்

இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசுவகுடி ஏரியின் கடக்கால் புனரமைப்பு பணி ரூ.5 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்றது. இந்த பணி முடிந்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், பின்னர் பெய்த மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியுள்ளது.

இந்த நிலையில் தற்போது கடக்கால் பகுதியில் கட்டப்பட்ட சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, சேதம் அடைந்துள்ளது. மேலும் கடக்கால் பகுதியின் அடிப்பகுதியில் இருந்து தண்ணீர் கசிந்து வெளியேறுகிறது. இதனால் ஏரிக்கரை உடையும் அபாயம் உள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே உடனடியாக கடக்கால் பகுதியை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்க்கசிவு

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் அப்பகுதியை சேர்ந்த பெண் விவசாயி சுதா:- பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து விசுவகுடி ஏரி கடக்கால் சீரமைப்பு பணி நடைபெற்றது. ஆனால் கடக்கால் முறையாக சீரமைக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் நீர்க்கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கடக்கால் பகுதியில் மறுசீரமைப்பு பணி செய்ய வேண்டும்.

முறையாக சீரமைக்க வேண்டும்

சமூக ஆர்வலர் முகமது ஜக்கரியா:- அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசலூர் ஏரியில் கடந்த ஆண்டு கடக்கால் அருகே உடைப்பு ஏற்பட்டு ஏரியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறியது. இதனால் அந்த கிராமத்தில் நீராதாரம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. இதேபோல் ஒரு சம்பவம் விசுவகுடியில் நடந்து விடுமோ? என்ற அச்சம் இந்த பகுதி விவசாயிகளிடம் நிலவி வருகிறது. குறிப்பாக விசுவகுடி ஏரி கடக்கால் சீரமைப்பு பணி முடிந்து சில மாதங்களை ஆன நிலையில், தற்போது நீர்க்கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. பழைய கட்டுமானத்தை முற்றிலுமாக அகற்றிவிட்டு, புதிதாகவே கட்டியிருக்கலாம். அவ்வாறு செய்யாத நிலையில், சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டும் பயனில்லாத நிலை உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர், இந்த கடக்கால் பகுதியை நேரில் ஆய்வு செய்து தண்ணீர் வீணாக வெளியேறாத வகையில் முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் இந்த பகுதியில் நீராதாரம் நிலையாக இருக்கும்.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்

விசுவகுடியை சேர்ந்த முஸ்தபா:- ஏரியின் அருகில் சிறுவர், சிறுமிகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க, முன்கூட்டியே திட்டமிட்டு மக்களையும், விளை நிலங்களையும் பாதுகாக்க வேண்டும். ஏரியில் தண்ணீர் தேங்கியிருந்தால்தான் விசுவகுடி கிராமத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு வராது. இல்லையென்றால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மேலும் நீர்நிலைகளில் உள்ள கட்டுமானங்களை தரமாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

- நன்றி: தினத்தந்தி 

https://www.dailythanthi.com/amp/News/State/if-the-bridge-is-damaged-again-there-is-a-risk-of-breaking-the-lake-bank-847729

நவம்பர் 17, 2022

விசுவக்குடி அணை - முட்கள், எருக்கன் செடிகள், ஆயிரத்தெட்டு விரிசல்கள் - அரசு ஏறெடுத்து பார்க்குமா?

 விசுவக்குடி அணை - முட்கள், எருக்கன் செடிகள், ஆயிரத்தெட்டு விரிசல்கள் - அரசு ஏறெடுத்து பார்க்குமா?




நவம்பர் 03, 2022

விசுவக்குடியில் மழை பொழிவதற்கு முன்பு மேகங்கள் சூழ்ந்த அழகிய காட்சி... ☁️

 


விசுவக்குடியில் மழை பொழிவதற்கு முன்பு மேகங்கள் சூழ்ந்த அழகிய காட்சி... ☁️

 Video 👇



நவம்பர் 01, 2022

முன்னாள் வார்டு உறுப்பினரின் கேள்விக்கு - ஊராட்சி நிர்வாகத்தின் பதில்!

 


அன்னமங்கலத்தில் இன்று நவம்பர் 1 கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் விசுவக்குடி முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினர் முஸ்தபா அவர்களின் கேள்வியும், அன்னமங்கலம் ஊராட்சி நிர்வாகத்தின் பதிலும் !

Video 👇



அக்டோபர் 09, 2022

விசுவக்குடியில் கந்தூரி விருந்து


இன்று முஸ்லிம்களின் இறுதி தூதரான முகமது நபி அவர்களின் பிறந்த தினம். இந்த தினத்தை மீலாது நபி விழா என கொண்டாடப்படுகிறது. இன்று விசுவக்குடியிலும் இன்று மீலாத் நபி விழா அனுசரிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு இன்று காலை 11 மணி அளவில் அல் ஜன்னத் சமுதாய நலக்கூடத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு அத்-தக்வா பள்ளிவாசலின் தலைமை இமாம் மௌலானா முஹம்மது சுலைமான் அவர்கள் தலைமை ஏற்றார். லெப்பை குடிக்காடு கிழக்கு பள்ளிவாசல் இமாம் மௌலானா முஹம்மது ஆரிப் மன்பயி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

நிகழ்வுக்கு பின்னர் அனைவருக்கும் கந்தூரி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சகோதரத்துவத்துடனும், மத நல்லிணக்கத்துடனும் சுமார் 3 ஆயிரம் பேர் உணவருந்தினர்.



அக்டோபர் 07, 2022

விசுவக்குடியில் சுகாதார சீர்கேடு - உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அன்னமங்கலம் ஊராட்சியின் வார்டு எண் 2 மற்றும் 3 என இரண்டு ஊராட்சி வார்டுகள் உள்ளது. 

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் இங்குள்ள 2வது வார்டில் தெற்கு தெரு மற்றும் பள்ளிவாசல் தெருவில் உள்ள சாக்கடை கழிவுநீர் முதல் தெருவின் இறுதியில் ஜமாலுதீன் என்பவரின் வீட்டின் வழியாக, அருகே உள்ள ஓடையில் சென்றடைகிறது.

இந்த தெருக்களில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அருகில் உள்ள ஓடையில் கலப்பதற்கு முன்பு தூய்மைப்படுத்த கிடைமட்ட வடிவ சமுதாய உறிஞ்சுழி ஒரு லட்சத்து 33 ஆயிரம் செலவில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்டது.

இந்த உறிஞ்சி குழியால் எந்த பயனும் இல்லை என தற்போது புகார் எழுந்துள்ளது. 

சுமார் ஆறு அடி நீளம் நான்கு அடி அகலத்தில் தொட்டி கட்டி அவற்றுள் தண்ணீரை வடிக்க மணல், ஜல்லி கற்கள் போன்றவற்றை நிரப்பி உள்ளனர்.

தொட்டிக்குள் கழிவுநீர் சென்ற பிறகு அதில் இருக்கும் சல்லடைகள் வழியாக அதில் உள்ள கசடுகள் நீக்கப்பட்டு கசடுகள் இல்லாத நீர் அருகில் உள்ள ஓடைக்கு செல்ல வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு இங்கு இல்லை.

இதனால் அந்த தொட்டிக்கு முன்னதாக கழிவுநீர், சாக்கடையில் சுமார் ஒரு அடி உயரத்தில் வீடுகளின் அருகில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி, துர்நாற்றம் வீசுகிறது. மேலும் வீடுகளின் சுவர்களும் சேதமடைந்தது வருவது மட்டுமில்லாமல், சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. 

வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதன் காரணமாக இப்பகுதி குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் உடனடியாக இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 





அக்டோபர் 02, 2022

விசுவக்குடி கிராம சபை கூட்டம் - அடுக்கடுக்காக கேள்வி கேட்ட பொதுமக்கள்


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சியில் மொத்தம் 12 ஊராட்சி வார்டுகள் உள்ளது. அதில் இரண்டு மற்றும் மூன்றாவது வார்டுகள் விசுவக்குடி கிராமத்தில் உள்ளது.

இன்று அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விசுவக்குடியில் உள்ள மூன்றாவது வார்டில் மாரியம்மன் கோயில் அருகே கிராம சபை கூட்டம் ஊராட்சியின் தலைவி மருதாம்பாள் தலைமையில் நடைபெற்றது.

காலை 11 மணி அளவில் கிராமசபை கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஊராட்சியின் செயலாளர் வருவதற்கு தாமதப்படுத்தியதால் மதியம் ஒரு மணிக்கே தொடங்கியது.

ஆனால் 12 வார்டு உறுப்பினர்களில் வெறும் நான்கு வார்டு உறுப்பினர்களும், அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள இரண்டு ஒன்றிய கவுன்சிலர்களில் ஒருவர் கூட வராததால் கோபமடைந்த கிராம மக்கள் ஊராட்சி தலைவி மருதாம்பாளை முற்றுகையிட்டு அடுக்கடுக்காக கேள்வி கேட்டு கிராம சபை கூட்டத்தை இன்று ரத்து செய்துவிட்டு வேறு ஒரு நாளில் நடத்துமாறு சூழ்ந்து கொண்டனர்.

பின்னர் வராத வார்டு உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து கிராம சபை தொடங்கியது.

மேலும் கூட்டத்தில் அன்னமங்கலம் ஊராட்சியின் வரவு செலவு அறிக்கை, விசுவக்குடியில் நிகழும் மின்னழுத்த குறைபாடு, பள்ளிவாசல் பின்புறம் உள்ள தெருவில் தெருவிளக்கு அமைத்து கழிவுநீர் கால்வாய் வசதியுடன் சாலை அமைத்தல், விசுவக்குடி ஏரியை மழைக்காலத்திற்கு முன்பே தூர்வாருதல், கல்லாற்றில் இருந்து விசுவக்குடி ஏரிக்கு வரும் வரத்து கால்வாயினை சீரமைத்தல், நூலகத்தை தரம் உயர்த்துதல்.... போன்றவைகள் விவாதித்து தீர்மானமாக ஏற்றப்பட்டது.

பின்னர் கிராம சபை முடிந்ததும் அனைவருக்கும் டீயும், வடையும் கொடுக்கப்பட்டது.

செப்டம்பர் 24, 2022

விசுவக்குடியில் அமைக்கப்படும் புதிய சாலை பாரம் தாங்குமா?


விசுவக்குடியிலிருந்து விசுவக்வகுடி அணை செல்லும் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் சுமார் 10 ஆண்டுகால கோரிக்கையாகும்.

அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு தற்போது மக்களின் வரிப்பணத்தில், சுமார் 106 லட்சம் செலவில் தார்சாலை அமைப்பதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் நல்லதம்பி அவர்கள் தார் சாலை அமைப்பதற்கான ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இன்று மாலைக்குள் தார் சாலை அமைக்கும் பணிகள் நிறைவடையும் என தெரிகிறது. ஆனால் சாலை வெறும் 20 mm அளவிற்கு மட்டுமே போடப்பட்டு வருகிறது. இதனால் இந்த சாலை பாரம் தாங்குமா? என தெரியவில்லை.

இந்த சாலையை இன்னும் சற்று தடிமனாக அமைத்து இருந்திருக்கலாம். 



செப்டம்பர் 17, 2022

விசுவக்குடி பள்ளிவாசலுக்கு சுற்றுலா வந்த சிறுவர்கள்


பெரம்பலூரில் உள்ள ஆதவ் பப்ளிக் பள்ளி சிறுவர்கள் இன்று சனிக்கிழமை விசுவக்வகுடி அணைக்கு கல்வி சுற்றுலா வந்தனர்.

பின்னர் அருகில் உள்ள வழிபாட்டு தளமான விசுவக்வகுடி தக்வா பள்ளிவாசலுக்கும் அழைத்து வரப்பட்டனர்.  வழிப்பாட்டு தளம் என்றால் உருவமும், கற்சிலைகளும் என பார்த்து பழகிய அவர்கள் பள்ளிவாசலில் உருவம் இல்லாமல், சிலைகள் இல்லாமல் இருந்ததை கண்டு வியந்தனர்.

மேலும் பள்ளிவாசலில் அமர்ந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக தியானத்தில் ஈடுபட்டனர்.

தியானத்திற்குப் பிறகு பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக முஸ்லிம்களின் இறைவேதம் திருக்குர்ஆன் என்றும், அதில் முதன் முதலில் இறக்கப்பட்ட திருகுர்ஆன் வசனம் படிப்பீராக... ஓதுவீராக... என்பதுதான். எனவே மாணவர்கள் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் உயர வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைவர் இப்றாகீம் அவர்கள் மற்றும் அல் அமீன் சங்க இளைஞர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் பள்ளி சிறுவர், சிறுமியர்கள் மகிழ்ச்சியாக திரும்பி சென்றனர். 

video 👇


video 👆




புது பொலிவுடன் விசுவக்குடி ரேஷன் கடை


விசுவக்குடி பள்ளிவாசல் அருகே ரேசன் கடை இயங்கி வருகிறது. பல ஆண்டுகளாக அதன் வர்ணம் மங்கி, கலையிழந்து அசுத்தமாக காணப்பட்டு வந்தது.

தற்போது ரேஷன் கடையை சீரமைக்கும் விதமாக புதிய வர்ணம் பூசப்பட்டு புது பொலிவுடன் காட்சி தருகிறது. 

ஆகஸ்ட் 15, 2022

விசுவக்குடியில் கிராம சபை கூட்டம் தொடங்குவதில் தாமதம் - கிராம மக்கள் காத்திருப்பு

விசுவக்குடியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மணி 12:40 ஆகிய நிலையில் இன்னும் ஊராட்சி உதவியாளர் வராத காரணத்தால் கிராம சபை இன்னும் தொடங்கவில்லை. இதனால் கிராம சபையில் கலந்து கொண்டவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.








 

ஆகஸ்ட் 09, 2022

விசுவக்குடியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டவர் கைது


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(வயது 30). இவர் வசிக்கும் தெருவில் சேறும், சகதியுமாக இருந்த இடத்தில் மண் கொட்டி நிரவப்படாமல் இருந்துள்ளது. 

இந்நிலையில் சீரமைப்பு பணியை முழுமையாக முடிக்காததை கண்டித்தும், சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் அவர் விசுவகுடி- அன்னமங்கலம் சாலையில் வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து வழிவிடாமல் சாலை மறியல் செய்துள்ளார். 

இது பற்றி தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட சிலம்பரசனை கைது செய்து அரும்பாவூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

பின்னர் மாலையில் அவரை விடுதலை செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் ஏற்பட்டது.

https://www.dailythanthi.com/News/State/arrested-for-picketing-demanding-the-repair-of-the-road-780574

ஜூலை 28, 2022

விசுவக்குடியில் திருட்டு பயம் அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார்


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் விசுவக்குடி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 2000க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். 

கடந்த சில தினங்களாக திருட்டு சம்பவங்கள் நடைபெற முயன்றதாக கிராம மக்கள் சார்பாக அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவது...

விசுவக்குடி கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக தினசரி திருடர்கள் பிரச்சனை அதிகமாக உள்ளது.

கிட்டத்தட்ட இரவு இரண்டு மணி முதல் 4 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஆங்காங்கே ஒரு சில வீட்டில் கதவுகளை உடைக்க முயற்சித்த போது வீட்டில் உள்ளவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு திருடர்கள் ஓடி விடுகின்றனர். இவர்கள் மூன்று பேர் என தெரியவுள்ளது. 

மேலும் 24/7/ அன்று ஓர் வீட்டின் கதவை உடைக்க முற்பட்டபோது ஊர் இளைஞர்கள் விரட்டி பிடிக்க முயன்ற போது இருட்டில் ஓடி விட்டார்கள்.

பின்பு தினசரி இதே பிரச்சனையில் உள்ளபடியால் ஊர் மக்கள் நிம்மதியின்றி, உறக்கமின்றி பயத்துடன் வாழ்கின்றோம். ஐயா அவர்கள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

ஜூலை 23, 2022

தெருவிளக்கு மற்றும் சாக்கடை வசதியுடன் சாலை அமைத்து தர மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி வார்டு எண் 2ல் பள்ளிவாசல் அருகே அல் ஜன்னத் சமுதாய நலக்கூடம் உள்ளது.

இந்த சமுதாய நலக்கூடத்தில் இருந்து மேற்கு திசை நோக்கி செல்லும் தெருவில் சுமார் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.

இதுவரை இத்தெருவில் ஒரு தெருவிளக்கு கூட அமைக்கப்படாததால் இப்பகுதியில் வசித்து வருபவர்கள் பல சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். 

பணி முடிந்து இரவு வீட்டிற்கு செல்பவர்களும், தொழுகையை நிறைவேற்ற பள்ளிவாசல் சென்று வருபவர்களும், டியூஷன் சென்று வரும் மாணவ, மாணவிகளும் மற்றும் இன்னபிற வேலை நிமித்தமாக வெளியில் சென்று வருபவர்களும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதனால் இரவு நேரங்களில் சிறுவர்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதற்கு கூட பயப்படுகின்றனர். தனியாக செல்லும் பெண்களிடம் வழிமறித்து பணம், நகை உள்ளிட்டவற்றை பறித்து செல்லும் வாய்ப்பும் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த தெருவில் சாலை வசதி இல்லாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மண் பாதையாக இருப்பதால் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக நடந்து செல்ல சிரமப்பட வேண்டிய நிலை காணப்படுகிறது. இதனால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பார்கள் வழுக்கி விழுந்து அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.

மேலும் சாக்கடை வசதி இல்லாத காரணத்தால் தண்ணிர் தேங்கி தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.

ஆகையால் தயவுகூர்ந்து தெருவிளக்கு மற்றும் சாக்கடை வசதியுடன் சாலை அமைத்து தருமாறு தாழ்மையுடன் கிராம மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

மனு எண் :

தங்களுடைய மனு எண்2022/9005/16/394441/0723 பெறப்பட்டது. தங்கள் மனுவின் நிலையை https://gdp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் - தமிழ்நாடு மின்ஆளுமை முகமை. 

விசுவக்குடியில் குறைந்த மின்னழுத்தம் - புதிய மின்மாற்றி அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே விசுவக்குடி கிராமம் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

இங்குள்ள மின்மாற்றியில் குறைந்த மின்னழுத்தத்தின் காரணமாக 220 வோல்ட் மின்சாரத்திற்கு பதில் மிகக் குறைந்த அளவாக சுமார் 150 வோல்ட் மின்சாரம் சப்ளை ஆவதால் போதிய அளவு மின்சாரம் இன்றி இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால் வீடுகளில் உள்ள மின்விளக்கு, மின்விசிறி, டி.வி மற்றும் குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக மின்சாதன பொருட்கள் பழுதாகி வருகின்றன.

மேலும், குறைந்த மின்னழுத்தத்தால் இந்தபகுதி பொதுமக்கள் சமையலுக்கு மாவு அரைத்தல், வீட்டு ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தொட்டிகளில் நீர் நிரப்புதல், வாசிங் மெசின்களில் துணி துவைத்தல்... போன்ற தங்களது அன்றாட பணிகளை விரைந்து முடிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தற்போது வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின் விசிறியை இயக்க முடியாததால் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் வியர்வையாலும், கொசு கடியாலும் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே விசுவக்குடி கிராமத்தில் கூடுதலாக இன்னொரு புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Your Petition No 2022/9005/16/394445/0723 is received. URL to check the status: https://gdp.tn.gov.in - Tamil Nadu e-Governance Agency. 

விசுவக்குடியில் பஸ் மறியல்


தொடர் மின்வெட்டு, குறைந்த மின்னழுத்தம், முறையாக குடிநீர் சப்ளை செய்யாதது, மூன்றாவது வீதியில் உடைந்த பாலத்தை சீர் செய்யாதது... போன்ற பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கக்கோரி விசுவக்குடி பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை 8:30 மணி முதல் 10 மணி வரை பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது.

பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பஸ் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

ஜூலை 15, 2022

விசுவக்குடியில் நன்றி தெரிவித்த எம்எல்ஏ (video...)

 

தன்னை வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு  ஜூலை 15ஆம் தேதி காலை இன்று பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் விசுவக்குடியில் நன்றி தெரிவித்தார்.



விசுவக்குடியில் திடீரென  எம் எல் ஏ வை சூழ்ந்துகொண்ட  மக்கள்


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி வார்டு எண் 2ல் பள்ளிவாசல் அருகே அல் ஜன்னத் சமுதாய நலக்கூடம் உள்ளது.

இந்த சமுதாய நலக்கூடத்தில் இருந்து மேற்கு திசை நோக்கி செல்லும் தெருவில் சுமார் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.

இந்த தெருவில் தெருவிளக்கு, சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமில்லை.

பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஜூலை 15ஆம் தேதி ஆன இன்று தன்னை வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் விசுவக்குடி வந்திருந்தார்.

அப்போது பள்ளிவாசல் அருகே வாகனத்தில் இருந்து இறங்கி வந்து நன்றி தெரிவிக்கும் பொழுது அத்தெருவாசிகள் எம்எல்ஏ-வை சூழ்ந்து கொண்டு தங்களுடைய பிரச்சனைகளை எழுப்பினர்.

பின்னர் அனைத்து பிரச்சினைகளும் ஊராட்சி தலைவரிடம் சொல்லி சரி செய்வதாக எம் எல் ஏ வாக்குறுதி அளித்த பின்னர் அத்தெருவாசிகள் கலைந்து சென்றனர். இதனால் விசுவக்குடியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Video...






விசுவக்குடி ஏரியில் சீரமைப்பு பணிகள் - இறை வணக்கத்துடன் MLA தொடங்கி வைத்தார்


விசுவக்குடி ஏரியில் உபரி நீர் வெளியேறும் கட்டுமானத்தில் விரிசல் என கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊர் மக்களால் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. அரசும் கோரிக்கையை ஏற்று 5 லட்சத்து 72 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தது.
 






இதனையடுத்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் அவர்கள் ஜூலை 15ம் தேதி இன்று இறை வணக்கத்துடன் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஜமாத் நிர்வாகிகள், அத்தக்வா பள்ளியின் தலைமை இமாம் முஹம்மது சுலைமான் அவர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.

ஜூன் 28, 2022

கல்லாற்றில் இருந்து விசுவக்குடி ஏரிக்கு நீர் வருவது தொடர்பாக பொதுப்பணி துறையின் பதில்


கல்லாற்றில் மண்ணரிப்பின் காரணமாக விசுவக்குடி பகுதிக்கு கல்லாற்று நீர் வருவதில்லை. எனவே பொதுப்பணித்துறை கல்லாற்று நீரை பாரபட்சமில்லாமல் பகிர்ந்து அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பி இருந்தோம்.

தற்போது மண்ணரிப்பு ஏற்பட்ட இடத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு மண் பரப்பப்பட்டுள்ளது. இது இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுதானா? என்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மனசாட்சிக்கு தெரியும். 

குறிப்பு: இது தொடர்பான வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.



ஜூன் 21, 2022

மின்தடை அறிவிப்பு


இன்று செவ்வாய் கிழமை (21.06.2022) கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைப்பெற இருப்பதால் விசுவக்குடி, முகமது பட்டிணம், பிள்ளையார் பாளையம், அன்னமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது. எனவே மின்வசதி தொடர்பான பணிகளை முன் கூட்டியே செய்து முடித்துக் கொள்ளவும்.

மே 16, 2022

விசுவக்குடியிலுள்ள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு


பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். 

இதில் வேப்பந்தட்டை தாலுகா விசுவக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் இருந்து பாசன கால்வாய்கள் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 

ஆனால் பொதுப்பணித்துறையோ பாசன கால்வாய்கள் அமைக்கப்பட்டு விட்டது என்று கூறுகிறது. இதனால் பாசன கால்வாய்கள் அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது. எனவே கலெக்டர் உரிய விசாரணை நடத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் முழுமையாக பாசன கால்வாய்கள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள விசுவக்குடி நீர்தேக்கத்தில் தற்போது உபரி நீர் கல்லாற்றின் வழியாக வெங்கனூர் ஏரிக்கு மட்டும் செல்கிறது. விசுவக்குடி அருகே கல்லாற்றில் இருந்து நீர்பிரிந்து ஓடையாக விசுவக்குடி, அன்னமங்கலம், வேப்பந்தட்டை சென்று, அங்கிருந்து வேத நதியாக பாலையூர், தொண்டாபாடி, நெய்குப்பை வழியாக சின்னாறு நீர்த்தேக்கத்திற்கு செல்வது வழக்கம். 

விசுவக்குடி யில் இருந்து மனு கொடுக்க வந்தவர்கள்

ஆனால் தற்போது கல்லாற்று நீர் வெங்கலம் ஏரிக்கு மட்டும் செல்கிறது. கல்லாற்றின் கிளை ஓடை பொதுப்பணித்துறை பராமரிப்பு செய்யாத காரணத்தால் நீர் வரத்து இன்றி வறண்டு கிடக்கிறது. இதனால் அந்தப்பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. 

எனவே பாரபட்சம் காட்டாமல் கல்லாற்று நீரை ஒருதலைபட்சமாக இல்லாமல் முறையாக பகிர்ந்து அளிக்க கிளை ஓடையை தூர்வாரி, அந்த ஓடையில் கல்லாற்று நீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் விசுவக்குடி கிராமத்தில் இருந்து சுற்றுலாத்தலமான விசுவக்குடி நீர்த்தேக்கத்திற்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் செல்லும் சாலை தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே அந்த சாலையை தார் சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விசுவக்குடியில் ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி கட்டுமானத்தில் உள்ள விரிசலை மழைக்காலம் வருமுன் சரி செய்ய வேண்டும், என்று அதில் கூறியிருந்தனர்.

மே 04, 2022

விசுவக்குடியில் நெற்பயிர்கள் சாக்கடை நீரில் அடித்துச் சென்று நாசம் (video...)


விசுவக்குடி பள்ளிவாசல் தெருவில் உள்ள விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெற்பயிர்களை உலர்ந்துவதற்காக காய வைக்கப்படுவது வழக்கம்.

திடீரென இன்று இரவு 7 மணி முதல் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்தது.  

ஊராட்சி நிர்வாகத்தால் பலமுறை  சாக்கடையை தூர்வாரி சுத்தம் செய்ய கோரியும் சுத்தம் செய்யாததால் பள்ளிவாசல் தெருவில் காய வைக்கப்பட்டு இருந்த சாதிக் என்பவருக்கு சொந்தமான நெல் பயிர்கள் அடைப்பின் காரணமாக தெருவில் சாக்கடை கலந்த மழை நீரில் நனைந்து அடித்துச் செல்லப்பட்டு வீணானது என வேதனை தெரிவித்தார்.

பின்னர் அவரே சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை தற்காலிகமாக இரவு என்று பாராமலும், மின்தடை என்று கூட பார்க்காமலும் தற்காலிகமாக அவரே அடைப்பை சரி செய்தார்.

எனவே அன்னமங்கலம் ஊராட்சி நிர்வாகம் விசுவக்குடியில் உள்ள தூர்வாரப்படாத சாக்கடையை உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.