இன்று மே ஒன்றாம் தேதி. உழைப்பாளர் தினம். இந்த தினத்தை முன்னிட்டு அன்னமங்கலம் ஊராட்சி விசுவக்குடி களத்து மேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
அன்னமங்கலம் ஊராட்சியின் செயளாலர் பாலுசாமி சரியாக 10:30 மணி அளவில் கிராம சபையை தொடங்கி நடத்தினார்.
விசுவக்குடியில் தெரு நாய்கள் பிடிப்பதற்கு மற்றும் புதிதாக கேமரா அமைத்ததாக 40,000 செலவு கணக்கு வாசிக்கப்பட்டது. அப்படி எந்தவித நாய்களை பிடிக்கும் சம்பவம் நிகழவில்லை, புதிதாக அமைக்கப்பட்ட கேமராவை காட்டுமாறும் கடுமையான எதிர்வினை ஆற்றப்பட்டது.
விசுவக்குடி முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினர் முஸ்தபா அவர்கள் விசுவக்குடியில் உள்ள தெருக்களில் உள்ள கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யப்படுவதில்லை எனவும் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்பினார்.
உடனடியாக கோரிக்கையை ஏற்ற தற்போதைய ஊராட்சி நிர்வாகம் இந்த ஒரு மாதத்திற்குள் விசுவக்குடியில் உள்ள அனைத்து கழிவு நீர் கால்வாய்களையும் சுத்தம் செய்வதாக வாய் வழி உத்தரவாதம் அளித்தனர்.
விசுவக்குடி தெருக்களில் உள்ள வீடுகளில் உள்ள குப்பைகளை சேகரிக்க வருபவர்கள் கடந்த நான்கைந்து மாதங்களுக்கு மேலாக வருவதில்லை, எனவே புதிதாக துப்புரவு பணியாளரை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் முஹம்மது ஜகரிய்யா கோரிக்கை எழுப்பினார்.
உள்ளூரை சேர்ந்தவர் அம்மாவாசை அன்னமங்கலத்தில் துப்புரவு பணி செய்து வருகிறார். அவரை உள்ளூரிலேயே பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், அவரும் பணி செய்ய உடனடியாக ஒப்புக் கொண்டார். நாளையிலிருந்து விசுவக்குடி முஸ்லிம் தெருவில் உள்ள வீடுகளில் மட்டும் குப்பை சேகரிக்க ஊராட்சி செயலாளர் நடவடிக்கை எடுத்தார்.
மேலும் விசுவக்குடியில் உள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகத்தை பள்ளி கல்வித்துறையில் ஒப்படைத்து, ஊர்ப்புற கிளை நூலகமாக மாற்ற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் மகளிர் குழுக்களை சேராத முஸ்லிம் பெண்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். சுமார் மதியம் 12:30 மணியளவில் கிராம சபை நிறைவு பெற்றது.
























