பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள முதல் (தெற்கு) தெருவில் சுமார் 50க்கும் அதிகமான வீடுகளில் சுமார் 200க்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த சுமார் 150 மீட்டர் தார்சாலை சேதமடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து கரடுமுரடாக உள்ளது.
இந்த தெரு சாலையை பயன்படுத்தி தான் ஊராட்சி ஓன்றிய தொடக்கப் பள்ளி, சமுதாய நலக்கூடம், தொழுகைக்காக பள்ளிவாசல், அடக்க தளம், விவசாய நிலங்கள் போன்றவைகளுக்கு சென்றுவர பயன்படுத்தப்படுகிறது.
வெயில் காலங்களில் இந்த தெரு சாலை புழுதியாகவும், மழை காலங்களில் சேறும் - சகதியுமாக இருப்பதனால் இந்த தெருவில் நடந்து செல்வதற்கு இங்குள்ளவர்கள் குறிப்பாக சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் மிகவும் சிரம படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் வழுக்கிவிழும் அபாயம் உள்ளதால் அவதிக்கு உள்ளாகின்றனர்.
எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி விசுவக்குடி முதல் (தெற்கு) தெருவின் இருபுறமும் சாக்கடை வசதியுடன் புதிதாக சிமெண்ட் 'பேவர் பிளாக்' சாலை அமைத்து தர, வேண்டுமென விசுவக்குடியில் உள்ள சமூக ஆர்வலர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
