இயற்கையாக அவுரி சாயத்தை தயாரிக்கும் பழமை வாய்ந்த தொழில் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள விசுவக்குடி கிராமத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைப்பெற்றுள்ளது.
இக் கிராமம் சாயத் தொழிலில் சிறந்து விளங்கியது மட்டுமில்லாமல், இதை சார்ந்த மக்களுக்கும் வாழ்வளித்துள்ளது. நமது கிராம மக்கள் பண்டைய நாட்களில் இருந்தே தங்கள் துணிகளுக்கு அவுரி செடி மூலம் சாயம் தேய்த்து வந்தனர்.
இந்தியாவில் சாயமேற்றும் முறை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தொல்பொருள் துறையும் கூறுகின்றது. இதுபோல் இயற்கையான முறையில் சாயமேற்றப்படும் நமது துணி உலகப் பிரசித்தி பெற்றது. இதனால் நமது பருத்திக்கும், அவுரிக்கும் ஆசைப்பட்டே ஆங்கிலேயர்கள் இங்கே வந்ததாகவும் கூறுவர்.
ஆங்கிலத்தில் இண்டிகோ என அழைக்கபடும் அவுரி செடி ஒராண்டு தாவரமாக இரண்டு மீட்டர் உயரம் வரை வளர கூடியது. இந்த செடியின் இலையை நீரில் ஊற வைத்து புளிக்க செய்து நீல சாயம் பெற அவுரி தொட்டிகளை பயன்படுத்தினர்.
விசுவக்குடி கிராமத்தில் செங்கல் மற்றும் காரைகளால் கட்டப்பட்டு தற்போது சிதிலமைந்து காணப்படும் அவுரி சாயத் தொட்டி 19ம் நூற்றாண்டை சேர்ந்தாக இருக்கலாம் கருதப்படுகிறது.
இப்பகுதியில் அவுரி செடி விவசாயத்திற்கு தேவையான நல்ல சுண்ணாம்பு மண், நல்ல தட்ப வெப்பநிலை, நல்ல நீர்வளம் போன்றவை சிறந்து விளங்கியுள்ளது.
ஆனால் திருப்பூர் சாய கழிவுகளை போல இவை எந்த பாதிப்பையும் தரவில்லை. ஏனெனில் அவுரி 18 வகை விஷங்களை போக்கும் ஒரு மூலிகை மற்றும் உரமாகவும் இருந்துள்ளது.
இப்படி வரலாற்றில் இடம் பிடித்திருந்த அவுரி சாயத் தொழில் செற்கை சாயங்களின் வருகையால் அழிய தொடங்கியது. இத் தொழில் மட்டுமல்ல இதை தெரிந்த மேதைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும் நாம் அறியும் முன்பே இருந்தும், இறந்தும் போய்விட்டனர்.
டை, கலரிங், கெமிக்கல் என உயிருக்கு உளை வைத்து கொள்ளாமல் நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட எந்த பக்க விளைவும் இல்லாத அவுரி சாயத் தொழிலை மீண்டும் மீட்க முடியுமா என்று தெரியவில்லை? ஆனால் நினைத்து பார்க்க முடியும்.
- தௌ.மு.ஜகரிய்யா
Visvakudipost@gmail.com
