பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் தொண்டமாந்துறை கிராமம் விசுவக்குடி ஊராட்சியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும் இடத்தை பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பெரம்பலூர் மாவட்டத்தின் நீராதாரத்தை பெருக்கும் வகையில் 2001 -2006 ஆம் ஆண்டு விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கம் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அந்தத் திட்டம் கடந்த 5 ஆண்டுகளாக
செயல்படுத்தப்படாமல் இருந்தது.
இந்தத் திட்டத்துக்கு தற்போது மதிப்பீடு தயாரிக்க உத்தரவிட்டதன் அடிப்படையில் ரூ. 19 கோடியில் விசுவக்குடி ஊராட்சி வாலையூர் மலைக்கும் செம்மலைக்கும் இடையே கல்லாறு ஓடையின் குறுக்கே புதிய நீர்த்தேக்கம் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த நீர்த் தேக்கமானது 30.67 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் வகையில் சுமார் 615 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட உள்ளது.
இதில் இரு மதகுகள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் நேரடியாக 859 ஏக்கர் புன்செய் நிலம் பாசன வசதி பெறும். மேலும் மதகின் மூலம் வெங்கலம் ஏரிக்கு கீழ் உள்ள சுமார் 421.41 ஏக்கர் ஆயக்கட்டுக்கு உறுதி செய்யப்பட்ட நீரும் நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதால் கிணற்றுப் பாசனம் மூலம் கூடுதலாக 169 ஏக்கர் புன்செய் நிலங்களும் பாசன வசதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மறைமுகமாக 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இந்தத் திட்டத்துக்கு தேவையான 22.25 ஏக்கர் பட்டா நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
வனத் துறையிலிருந்து சுமார் 4.94 ஏக்கர் நிலம் கையகப்படுத்த மத்திய அரசில் முதல் கட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றார்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ. சகுந்தலா, ஒன்றியக் குழுத் தலைவர்கள் ஆர்.பி. மருதைராஜ், கிருஷ்ணகுமார், க. ஜெயலட்சுமி, பொதுப் பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு முதன்மை பொறியாளர் கணேச மாருச்சன், முதன்மை பொறியாளர் (கட்டடம்) சம்பத், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஏ. சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கி. கண்ணதாசன், மாவட்ட அதிமுக செயலர் மா. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நன்றி- தினமணி நாளிதழ்
