பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் ஊராட்சியை சேர்ந்த 6 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குவதற்கான ஆணையை வழங்கி விட்டு கடன் வழங்காமல் அளிப்பதாகவும், உடனடியாக கடன் தொகையை வழங்க கோரியும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் 6 மகளிர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்கு கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி திருச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சரால் உத்தரவிடப்பட்டு கடன் வழங்குவதற்கான ஆணையும் குழுவினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அதனை யடுத்து அந்தக் குழுவினர் அன்னமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு சென்ற கடன் தொகையை கேட்டுள்ளனர். அதற்கு வங்கியில் அலுவலர்கள் சரியான விளக்கம் அளிக்காமல் அவர்களை அலைக்கழித்து இதுவரை கடன் தொகையை வழங்கவில்லை.
இதனால் வேதனை அடைந்த அந்த மகளிர் குழுவினர் உடனே கடன் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
நன்றி: தினகரன் நாளிதழ்

