பிப்ரவரி 26, 2021

புதிய தார் சாலை அமைக்கும் பணி. இறை வணக்கத்துடன் ஆரம்பமானது

 


விசுவக்குடி கிராம மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை வெற்றி பெற்றது. விசுவக்குடியிலிருந்து விசுவக்குடி அணை செல்லும் பாதை தார் சாலையாக அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் இறை வணக்கத்துடன் இன்று (26.02.2021) வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. (எல்லா புகழும் இறைவனுக்கே)

விசுவக்குடியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் மாவட்டத்தின் சுற்றுலா தளங்களில் ஒன்றான விசுவக்குடி அணை உள்ளது. 

இந்த அணை செல்லும் சாலையை பயன்படுத்தி தினமும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றது.

இதில் முதல் 2 கிலோ மீட்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மெட்டல் சாலையாக அமைக்கப்பட்டது. 

சாலையில் உள்ள மண் கரைந்து ஜல்லிகற்கள் தனியாக பெயர்ந்து கரடு முரடாக போக்குவரத்திற்கு லாயக்கி அற்றதாக மாறியுள்ளது.

மேலும் வெயில் காலங்களில் புழுதியும், மழை காலங்களில் சேறும் சகதியாக மாறிவிடுகிறது. இதனால் விளை நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள், தொண்டமாந்துறை, அரும்பாவூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், விசுவக்குடி அணை செல்லும் சுற்றுலா வாசிகள் என இந்த சாலையை பயன்படுத்தும் அனைத்து தரப்பினரும் கடும் அவதியடைந்து வந்தனர். 

எனவே தமிழக அரசு விசுவக்குடியில் இருந்து விசுவக்குடி அணை செல்லும் மெட்டல் சாலையை தார் சாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக விசுவக்குடி கிராம மக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை எழுப்பி வந்தனர்.

தற்போது அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, சுமார் 90 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி இன்று மதியம் வெள்ளி கிழமை 12:30 மணியளவில் இறை வணக்கத்துடன் ஆரம்பமானது. இந்த சாலைகான ஒப்பந்தம் சேலம் RK கன்ஸ்ட்ரக்ஸன் பெற்றுள்ளது. இதன் உரிமையாளர் வெற்றிவேல் M.A., M.Ed.,M.Phil., இந்த நிகழ்வில் விசுவக்குடி ஜமாத் நிர்வாகிகள், அத்தக்வா பள்ளிவாசல் இமாம், ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊர் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தேர்தல் நேரம் என்பதால் அவசரகதியில் இல்லாமல் தரமாக அமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.











Previous Post
Next Post

post written by: