மார்ச் 16, 2022

விசுவக்குடியில் BSNL டவர் அமைக்க ஜமாஅத் சார்பாக கோரிக்கை


திருச்சியில் உள்ள பிஎஸ்என்எல் பொது மேலாளரிடம் இன்று மார்ச் 16 ஆம் தேதி அளித்த கோரிக்கை மனுவின் விபரம் 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் போன்ற கிராமங்கள் உள்ளன.

சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் இந்த கிராமங்களில் எந்த ஒரு தொலைத் தொடர்பு கோபுரங்களும் இல்லை. 

அருகில் இருக்கும் ஊரான அன்னமங்கலத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து வரும் சிக்னல் (சமிக்ஞைகள்) சீரானதாக இல்லை.

இதனால் பேசுவதும், கேட்பதும் தெளிவாக இல்லாததால் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.

அவசரமான நேரங்களில் உறவினர்களோடும், நண்பர்களோடும் பேசுவதற்கு கூட மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

போதிய அளவு சிக்னல் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி பயிலும் மாணவ- மாணவிகள் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது. 

இதன் காரணமாக போன் பேசுவதற்காக இரவு நேரங்களில் கூட, வீட்டைவிட்டு வெளியே வரவேண்டிய நிலை உள்ளது.

இதுமட்டுமல்லாமல் மருத்துவம், திருமணம் போன்ற பணிகளில் அலைச்சலும், காலதாமதமும் ஏற்படுவதால் அலைபேசி பயனர்கள் ஆகிய நாங்கள் பெரும் சிக்கல்களை சந்தித்து வருகிறோம்.

மேலும் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுவதால் கைரேகையைப் பதிவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

நவீன காலமாக மாறிவரும் இந்த சூழ்நிலையில், வெளியுலக தொடர்புக்கு அலைபேசிகள் மிகவும் அவசியமான தேவையாக உள்ளது.

எனவே எங்கள் கோரிக்கையை ஏற்று அரசின் தொலைத்தொடர்பு (BSNL) கோபுரத்தை விசுவக்குடியில் அமைத்துக் கொடுத்து விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் மற்றும் விசுவக்குடி அணை போன்ற பகுதிகளில் சேவை வழங்குமாறு அனைத்து மக்களின் சார்பாகக் கேட்கிறோம். 

Previous Post
Next Post

post written by: