ஜூலை 11, 2017

விசுவக்குடி கிராமத்தை தரம் உயர்த்த கோரிக்கை

அன்னமங்கலம் ஊராட்சியில் இருந்து விசுவக்குடி கிராமத்தை பிரித்து தனி ஊராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி மக்களின் சார்பாக முதலமைச்சரின் குறைத்தீர்க்கும் பகுதியில்  கோரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கோரிக்கை விபரம்:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் அன்னமங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம், அரசலூர், அன்னமங்கலம், பூம்புகார் என 7 கிராமங்களை கொண்டுள்ளது. இங்கு சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

பெரிய ஊராட்சியாக இருப்பதால் விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் போன்ற கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், சாலைவசதி, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் போதுமான அளவு கிடைப்பதில்லை.

வீட்டு வரி, குடிநீர் வரி போன்ற வரிகளை செலுத்தவும், புதிய கட்டிடம் கட்டுவதற்கு அங்கீகாரம் பெறுவதற்கும் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அன்னமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு செல்ல வேண்டி உள்ளதால் இது மிகவும் சிரமமாக இருக்கிறது.

மேலும் விசுவக்குடி மற்றும் அதன் அருகில் உள்ள முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் கிராமங்களில்  சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இதில் சுமார் 1800 வாக்காளர்கள் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இதைவிட குறைவான மக்கள் தொகை உள்ள கிராமங்களான

* Malavarayanallur (633)
* மாவிளங்கை (1106)
* பெருமாத்தூர் ( 1182)
* அகரம் (1,376)
* புது அம்மாபாளையம் (1,446)
* பெரிய வெண்மணி (1469) ஆகியன தனி ஊராட்சியாக இயங்கி வருகின்றது.

பின்தங்கியுள்ள இப்பகுதியை ஊராட்சியாக தரம் உயர்த்தினால் தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சி ஏற்படும்.

எனவே விசுவக்குடியை முதன்மையாக கொண்டு அருகில் உள்ள முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் கிராமங்களையும் இணைத்து புதிய ஊராட்சி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Previous Post
Next Post

post written by: