நவம்பர் 28, 2010

விசுவக்குடி பகுதிக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் மக்கள் வலியுறுத்தல்

படங்கள், செய்திகள் : தௌ.மு.ஜகரிய்யா
       பெரம்பலூர் பிள்ளையார் பாளையத்துக்கு விசுவக்குடி வழிதடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் பகுதிகளில் சுமார் 4ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் தினமும் ஒரு அரசு பேருந்து மட்டுமே கடந்த 28 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வீட்டு தேவைக்கும், விவசாய விளைப்பொருட்களுக்கும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், மருத்துவ சுகாதார வசதிகளை பெற மற்றும் பலர்
அத்யாவசிய தேவைக்காக செல்பவர்கள் என பலதரப்பினரும் 15கீ.மீ தொலைவிலுள்ள மாவட்ட தலைநகரான பெரம்பலூர் சென்று வருகின்றனர்.

இதனால் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிவதால் படிகளில் தொங்கியவாறு மாணவ, மாணவிகள் பயணம் செய்வதால் அசம்பாவித சம்பவங்கள் நிகழும் வாய்ப்புள்ளது. தற்பொழுது குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுவும் பல நேரங்களில் பழுது காரணமாக வருவதில்லை. குறிப்பாக பெண்களும், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் இப்பகுதியில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டு வருகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் அரசு மீது அதிருப்தியில் இருக்கின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

            முகமது பட்டினத்தில் உள்ள அல்-முபின் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற தலைவர் ஹாலித் கூறியது. கிராமப்புற விவசாயிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் பள்ளி சென்றுவரவும், அத்யாவசிய தேவைக்காகவும், அன்றாடம் பெரம்பலூர் சென்று வருபவர்களுக்கு போதுமான பேருந்து வசதி இல்லாததால் பல விவசாய குடும்பத்தினர் இடம் பெயர்ந்து சென்றுவிட்டனர். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் நாடு வளர்ச்சி அடையாது. எனவே போதுமான அளவு போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும் என்றார்.

           பிள்ளையார்பாளையம் கல்லூரி மாணவி விமலா கூறும்போது பிள்ளையார் பாளையம் மற்றும் முகமது பட்டின மக்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கும், அரசு மருத்துவமனைக்கு செல்வதற்கும் இன்னபிற காரணங்களுக்கு இங்கிருந்து 5கீ.மீ. தொலைவில் உள்ள கிருஷ்ணாபுரம் செல்ல வேண்டும். பேருந்து வசதி இல்லாததால் 13 கி.மீ. இரண்டு பேருந்துகள் மாறி சுற்றி செல்ல வேண்டியுள்ளது. எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக கூடுதல் பேருந்து வசதி இந்த வழிதடத்தில் ஏற்படுத்த வேண்டும்.


                விசுவக்குடி ஜமாத் தலைவர் ஷேக் அப்துல் ஹமீது கூறும்போது குடும்ப அட்டை பெறுவதாக இருந்தாலும், ரேசன் கார்டுவில் பெயர்சேர்ப்பதாக இருந்தாலும், விலாசம் மாற்றுவதாக இருந்தாலும் மற்றும் பல காரணங்களுக்காக வேப்பந்தட்டையில் உள்ள தாலுக்கா அலுவலகம் செல்ல வேண்டும். ஆனால் அந்த வழிதடத்தில் பேருந்துவசதி இல்லை. இப்பகுதி மக்கள்  வேப்பந்தட்டை மார்க்கமாக பேருந்து வசதியினை ஏற்ப்படுத்த வேண்டுமென பல மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கையில்லை. இங்கு வரும் பேருந்தில் கூட்டம் அலைமோதுவதால் பேருந்து படியில் தொங்கியவாறே உயிரை பணயம் வைத்து பயணம் செய்கின்றனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். கண்டும் காணாமல் இருக்குமேயானால் அதனுடைய பாதிப்பை மக்கள் உணர்த்த வேண்டிய காலம் எதிர்வந்து கொண்டிருக்கிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறினார்.
Previous Post
Next Post

post written by: