வேப்பந்தட்டை அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஊராட்சியில் அரசலூர், விசுவகுடி, முகமதுப்பட்டினம், பிள்ளையர்பாளைம் ஆகிய கிராமங்கள் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் இந்த சாலையை
தான் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தனர். அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த முகமதுப்பட்டினத்தை சேர்ந்த பொது மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு அன்னமங்கலம் - பிள்ளையார்பாளையம் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை அவ்வழியே பெரம்பலூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் வேப்பந்தட்டை தாசில்தார் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.