டிசம்பர் 13, 2011

விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத்தை வெல்ல மக்கள் செய்ய வேண்டியது என்ன?


பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத்திட்டம் தொடர்ந்து புறந்தள்ளப்பட்டு வருகின்றது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே இந்த பகுதியின் வறட்சியை போக்குவதற்காக 1942 ஆம் ஆண்டே ஆலோசிக்கப்பட்ட திட்டம் தான் விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத் திட்டம். நிலத்தடி நீர் மூலம் விவசாயம் நடைபெறும் இந்த பகுதியில் போதிய நீர்ஆதாரம் இல்லாததால் விளைநிலங்கள் அனைத்தும் தரிசாக மாறிவருவதால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள்
மாற்று தொழிலுக்கு சென்றது மட்டுமில்லாது, பெரும்பாலான குடும்பங்கள் இந்த பகுதியை விட்டு நகரங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

கிணறு வெட்டுவதற்கும், ஆழ்குழாய்க் கிணறு அமைப்பதற்கும் கடன் வழங்ககூடாது என்று நபார்டு வங்கி பெரம்பலூர் மாவட்டத்தின் பல வட்டாரங்களை கறுப்பு பட்டியலில் வைத்துள்ளது. இத்தகைய பிரச்சனையுடன் இந்த பகுதி மக்களின் பிரச்சினைகள் மதிப்பளிக்கப்படாமல் கிடக்கின்றன.

ஓவ்வொரு தேர்தலின் போதும் விசுவக்குடி கல்லாறு நிர்த்தேக்கத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என ஓட்டு கேட்டு வரும் எல்லோரும் வாக்குறுதி கொடுப்பார்கள். பிறகு மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளமாட்டார்கள். இந்த அரசியல் தந்திரம் தெரியமால் மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் ஏமாந்துதான் போகின்றனர்.

இதற்கு முன் ஆ.ராசா இப்போது து.நெப்போலியன் என மத்திய அமைச்சர்களை தேர்ந்தெடுத்த பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதில் இவர்கள் எந்த முனைப்பும் காட்டவில்லை. மத்திய சென்னைக்கு பிறகு தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக மத்திய அமைச்சர் தொகுதி என்ற பெருமையை மட்டும் தான் இவர்களால் பெற்று தர முடிந்தது.

2005 ஆம் ஆண்டில் ஜெயலலிதா அறிவித்த 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  14 நீர்பாசன திட்டங்களில் ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து 2ஜி அலைகற்றை ஊழலில் சிக்கி திகார் சிறையில் இருக்கும் முன்னால் மத்திய அமைச்சா ஆ.ராசா 2007ல் 12 கோடி ரூபாயில் விசுவக்குடி கல்லாறு நீர்தேக்கத்திட்டம் நிறைவேற்ற போவதாக அறிவித்தார். கடந்த 2010 மார்ச் மாதம்19ம் தேதி சட்டமன்றத்தில் பொதுப்பணித் துறை மற்றும் நீர்ப்பாசனத்துறை மானியக் கோரிக்கையின் போது தமிழக முன்னால் முதல்வர் கருணாநிதி பெரம்பலூர் அருகே விசுவக்குடி கல்லாற்றில் ஏரி அமைக்கப்படும் என அறிவித்தார். எல்லாமே அறிவிப்போடு நின்று போனது.

2011ல் இந்த பகுதி மக்களின் கோரிக்கையான விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் ஜெயலலலிதா வாக்குறுதியளித்தார். இதனால் மக்கள் நம்பிக்கையோடு வாக்களித்து வெற்றிபெற செய்தனர். அவர் முதல்வர் ஆக வேண்டும் என பிரார்தித்த மக்கள் ஏராளம். இப்படி மகத்தான வெற்றிபெற செய்த மக்களின் கோரிக்கையை மறந்த ஜெயலலிதா புதிய பேரவையின் ஆளுநர் அறிக்கையிலும், நிதிநிலை அறிக்கையிலும் கூட இத்திட்டத்தை பற்றி பேசாமல் இந்த பகுதி மக்களை அலட்சியபடுத்தியிருக்கிறார்.

கடந்த நவம்பர் 11ந் தேதி வெள்ளியன்று பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் பொதுபணித்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு என்கிற பெயரில் '2012ல் விசுவக்குடி கல்லாறு நீர்த் தேக்கத் திட்ட பணிகள் தொடங்கும்' என்று கண் துடைப்புக்கு ஓர் அறிவிப்பு செய்தார். ஆனால் இதுவரை இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிகுறியும் தெரியவில்லை.

பச்சைமலையில் உற்பத்தியாகிவரும் கல்லாறு வெயில் காலங்களில் வற்றியும், மழைகாலங்களில் வீணாகியும் வருகிறது. சின்ன அணை கட்டினால் வெள்ள பெருக்கின் அழிவும் வெயில்காலவாட்டமும் முடிவுக்கு வருவது மட்டுமில்லாது இந்தியாவின் முக்கிய தொழிலான விவாசயத்திற்கு போதிய  நீர் ஆதாரம் கிடைக்கும். இப்படிபட்ட திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முனைப்பு காட்டாமல் கோரிக்கையை புறந்தள்ளும் செயலில் தொடர்ந்து அரசு ஈடுபட்டுவருகிறது. 

இந்த கோரிக்கை குறித்து எழுத்து பூர்வமான உத்தரவாதமோ, ஆக்கபூர்மான நடடிவடிக்கைகளே இல்லாததால் தங்கள் பிரச்சனை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது. இந்த அவல நிலையை சரிசெய்ய இதுதான் பொருத்தமான தருணம் என்பதை உணர்ந்து உடனடியாக களத்தில் இறங்க வேண்டும். 

செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் மீண்டும் எழுப்ப வேண்டும்.

நமது பிரச்சனைகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பதற்கும், கோரிக்கைகளுக்கு ஆதரவாக ஒரு பொதுகருத்தை உருவாக்குவதற்கும் மக்கள் தயாராக வேண்டும். கோரிக்கையை வெல்ல ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி வீயூகத்துடன் போராடுவதற்கு களம் அமைக்க மக்கள் தயாராக வேண்டும். அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும். கோரிக்கையை வெல்ல அனைத்து ஊர் மக்களையும் இணைத்து தன்னெழுச்சியாய் போராட வேண்டும். 

அரசு முரண்டு பிடிக்கும் அம்சங்களில் நீதிமன்றத்தை நாட வேண்டும். கோரிக்கையை மீட்க அமைப்புகள் முன்வர வேண்டும். நமக்காக தி.மு.க. இருக் கு  அ.தி.மு.க இருக்கு, அவர்கள் பேசுவார்கள் என்று கருதி அமைதி காத்தால் ஏமாற்றமே மிஞ்சும். முல்லை பெரியார் விசயத்தில் மக்கள் ஒன்று திரண்டு போராடுவது போல் உரத்து முழங்கி போராடினால் தான் கல்லாறு நீர்த்தேக்க விசயத்தில் அரசு காட்டும் இறுக்கம் குறையும். பிரச்சனைகளை முன்னெடுத்து செல்லும் ஊடகங்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்.

இவை அனைத்துக்கும் மேலாக, தமது பிரச்சனைகள் என்னென்ன என்பது குறித்த தெளிவான அறிதல் மக்களுக்கு வேண்டும்.

(தௌ.மு.ஜகரிய்யா) 

aahazack@yahoo.com


Previous Post
Next Post

post written by: