பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டப் பணிகள் 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்படும் என்றார் பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன்.
அன்னமங்கலம் கிராமத்தில், விசுவக்குடி - கல்லாறு பகுதியில் ரூ. 19 கோடியில் நீர்த்தேக்கத் திட்ட கட்டுமானப் பணிகள் தொடங்குவது தொடர்பாக, பொதுப்பணித் துறை அலுவலர்கள் கணேசன் மாரிச்சாமி, தமிழரசன்
ஆகியோருடன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட பின்னர் அவர் கூறியது:
ஆகியோருடன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட பின்னர் அவர் கூறியது:
கடந்த 2003 ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியின் போது, இந்தப் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் ரூ. 7.5 கோடியில் நீர்த்தேக்கத் திட்டம் தொடங்க பரிந்துரைக்கப்பட்டது.
பின்னர் வந்த திமுக அரசு, இந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டது. இப்போது இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 19 அடி உயரமும், 615 அடி நீளத்துடன், விசுவக்குடி அணை கட்டப்பட உள்ளது.
இதனால், நேரடியாக 859 ஏக்கர் பாசன நிலமும், மறைமுகமாக 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன நிலமும் பயன்பெறும். இந்தத் திட்டத்துக்காக, 22 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இன்னும் ஒரு மாத காலத்தில் ஆய்வுகள் முடிக்கபட்டு, 2012 ஜனவரி மாதம் இறுதியில் அடிப்படைப் பணிகள் தொடங்கப்படும் என்றார் அவர்.
வேப்பந்தட்டை ஒன்றியச் செயலர் எஸ். கண்ணுசாமி, ஒன்றியக் குழுத் தலைவர் ஜயலட்சுமி கனகராஜன், செயற்பொறியாளர் சிவானந்தம், உதவிச் செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவிப் பொறியாளர் சித்தார்த்தன், தொழில்நுட்ப உதவியாளர் படைகாத்தான், அன்னமங்கலம் ஊராட்சித் தலைவர் குதரத்துல்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நன்றி - தினமணி
