ஜூலை 29, 2011

விசுவக்குடியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

  பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி கிராமத் தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(28). இவரது மனைவி லட்சுமி(25). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

 இவர்களது மகன் விஷாந்த் (6), ஸ்ரீவித்யா(4). விஷாந்த் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பும், ஸ்ரீவித்யா எல்கேஜியும் படித்து வந்தனர். கிருஷ்ணமூர்த்தி தற்போது சென்னை கோயம்பேட்டில் உள்ள பழ மண்டியில் வேலை செய்து வருகிறார். 

 அடிக்கடி ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துச் செல்வது வழக்கம். கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்கு எதிர் வீட்டில் அவரது தாய் அமராவதி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும், மாடு பால் கறக்க லட்சுமி எழுந்து வராததால் சந்தேகமடைந்த அவரது மாமியார் அமராவதி, வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளார். 

  ஆனால் லட்சுமி கதவை திறக்கவில்லை. இதையடுத்து அவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளார். அப்போது லட்சுமி, தனது குழந்தைகளை தூக்கில் போட்டு கொன்றுவிட்டு, அவரது தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அமராவதி அதிர்ச்சியடைந்தார். சேலையின் ஒரு தலைப்பில் லட்சுமியும், மறு தலைப்பில் ஸ்ரீவித்யாவும் தொங்கிக் கொண்டிருந்தனர். மற்றொரு சேலையில் விஷாந்தை லட்சுமி தூக்கில் போட்டுள்ளார். இதுபற்றி தகவலறிந்த அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கதவை உடைத்து தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்த 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

     பெரம்பலூர் எஸ்பி ரூபேஸ் குமார் மீனா சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப் பதிந்து அவர்களின் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

   வழக்கமாக தூக்கில் தொங்கும்போது முடிச்சு பின்பக்கம்தான் இருக்கும், ஆனால் இவர்கள் போட்ட தூக்கில், முடிச்சு முன்பக்கம் இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இவர்கள் கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Previous Post
Next Post

post written by: